Thursday, April 26, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 55

கந்தர் அந்தாதியில் ஒரு பாடல்

உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணாமுலையுமை மைந்தா சரணந் தனமொப்பில்
உண்ணாமுலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே


பதவுரை-

உண்- கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற

ஆ - பசு இனங்கள் (வாழ்கின்ற)

முலை - முல்லை நிலத்திற்கு

உ - தலைவனாகிய திருமாலின்

மை - கருமை நிறத்தையும்

மைந்து  - வலிமையும்

ஆசு - உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்)

அரண் - கோட்டையாக உள்ள

அம்பர் - கடலில் ஒளிர்ந்திருக்கின்ற அசுரர்களின்

உயிர் - ஜீவனை

சேர் - மாய்த்து

உள்= தேவர்களின் உள்லத்தில் இருந்த

நாம் - அச்சத்தை

உளையும்- போக்கி அழித்த

ஐ- தெய்வமே


மை தா - ஆட்டு வாகனத்தில் ஏறும்

சர் - உழணத்தை உடைய அக்னி தேவன்

அண் - சேர்ந்திருக்கும்

நம் - நம் அடைக்கலம் புகுவத்ற்கு இடமாகிய

அருணை வெற்பாள் - அண்ணாமலையில் விளங்கி அருளும்

உண் - மிகுதியாகப்

ஆம் - பெருகும்

முலையும் - கற்புடமைக்கும்

ஐ- அழகிய

மை - அஞ்சனம் தீட்டிய

தா - செவிகளை எட்டிப் பிடிக்கும்

சர - விழிகளின்

நந்தனமும் - கிருபைக்கும்

ஒப்பில்- ஒப்புவமை இல்லாத

உண்ணாமலை உமை - உண்ணாமுலை என் கிற பெயர் கொண்ட பார்வதியின்

மைந்தா - குமரனே

சரண்..சரண்..உனக்கே - உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்



பொழிப்புரை -

திருமாலின் நிறம் போல் கறுத்தும் வலிமையும் உவர்ப்புமுடைய கடலின் கண் அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கிய தெய்வமே, அக்கினியின் சொரூபமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் ,கற்புடமைக்கும் ஒப்புவமை இல்லாத பார்வதிதேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்

Monday, April 16, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 54

இதர உதர உவமை

ஒரே பாடலில் உவமேயத்தை உவமானமாகவும், உவமானத்தை உவமேயமாகவும் தொடர்ச்சியாகக் கூறுவது இதர உதர உவமை ஆகும்.
அதாவது, முதலில் உவமானமும்,உவமேயமுமாகச் சொல்லுதல்.இவ்வாறு சொல்வதன் நோக்கம், இப்பொருளுக்கு ஒப்புமையாகக் கூடிய மூன்றாவது பொருள் எதுவும் இல்லையென குறிப்பது ஆகும்
இதர விதுரம் என்ற தொடருக்கு ஒன்றிற்கொன்று எனப் பொருள்

களிக்கும் கயல்போலும் நும்கண்: நும்கண்போல்
களிக்கும் கயலும்: கனிவாய்த் தளிர்க்கொடியீர்:
தாமரைப்போல் மலரும் நும்முகம்:நும்முகம்போல்
தாமரையும் செவ்வி தரும்

தளிரோடு கூடிய கொடி போன்ற நங்கையீர்"கயல் மீன்களைப் போல நும் கண்கள் களிக்கின்றன.நும் கண்களைப் போலக் கயல் மீன்களும் களிக்கின்றன.தாமரைப்போல நும் முகம் மலர்ந்துள்ளது.நும் முகம் போல தாமரையும் மலர்ந்து அழகு தருகின்றது

Saturday, April 14, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 53

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய ஐந்திணை ஐம்பது என்னும் நூலிலே காதலின் தியாகத்தினை ஒரு அழகான பாடல் மூலம் மாறன் பொறையனார் எடுத்துக் காட்டியுள்ளார்


"சுனைவாய்ச் சிறுநீரை எயிதாதென்(று) எண்ணியப்
பிணைமான் இனிதுண்ண வேண்டிக்  கலைமான் தன்
கள்ளத்தின் உச்சும் சுரமென்பார் காதலர்
உள்ளம் படர்ந்த நெறி"

சுனையில் சிறிதளவே நீர் உள்ளது.ஒரு மானே அருந்தும் அளவுள்ளது.ஆண்மான் குடிக்காது விட்டால் பெண்மான் குடிக்காது.எனவே ஆண்மான் சுனைநீரில் குடிப்பது போல வாயை வைத்துப் பாவனை செய்து பெண்மானை குடிக்கச் செய்கிறது.காதலிலே, விட்டுக் கொடுப்புகள்,தியாகங்கள்,அன்புப் பரிமாற்றங்கள் அளவுக்கதிகமாகப் பேணப்படுகின்றன 

கொஞ்சி விளையாடும் தமிழ் - 52


      உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
      உண்ணா முலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
      உண்ணா முலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
      உண்ணா முலையுமை மைந்தா சரணங் சரணுனக்கே.

......... சொற்பிரிவு .........

உண் ஆ முலை உமை மைந்து ஆசு அரண் அம்பரர் உயிர்சேர்

உள் நாம் உலையும் ஐ மை தா சர் அண் நம் அருணை வெற்பாள்

உண் ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில்

உண்ணா முலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே.

......... பதவுரை .........

உண் ... கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற,

ஆ ... பசு இனங்கள் (வாழ்கின்ற),

முலை ... முல்லை நிலத்திற்கு,

உ ... தலைவனாகிய திருமாலின்,

மை ... கருமை நிறத்தையும்,

மைந்து ... வலிமையும்,

ஆசு ... உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்),

அரண் ... கோட்டையாக உள்ள,

அம்பர் ... கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களின்,

உயிர் ... ஜிவனை,

சேர் ... மாய்த்து,

உள் ... தேவர்கள் உள்ளத்தில் இருந்த,

நாம் ... அச்சத்தை,

உளையும் ... போக்கி அழித்த,

ஐ ... தெய்வமே,

மை தா ... ஆட்டு வாகனத்தில் ஏறும்,

சர் ... உஷ்ணத்தை உடைய அக்னி தேவன்,

அண் ... சேர்ந்திருக்கும்,

நம் ... நாம் அடைக்கலம் புகுவதற்கு இடமாகிய,

அருணை வெற்பாள் ... அண்ணாமலையில் விளங்கி அருளும்,

உண் ... மிகுதியாகப்,

ஆம் ... பெருகும்,

முலையும் ... கற்புடமைக்கும்,

ஐ ... அழகிய,

மை ... அஞ்சனம் தீட்டிய,

தா ... செவிகளை எட்டிப் பிடிக்கும்,

சர ... விழிகளின்,

நந்தனமும் ... கிருபைக்கும்,

ஒப்பில் ... ஒப்புவமை இல்லாத,

உண்ணாமுலை உமை ... உண்ணாமுலை என்கிற பெயர் கொண்ட பார்வதியின்,

மைந்தா ... குமாரனே,

சரண் சரண் உனக்கே ... உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.

......... பொழிப்புரை .........

திருமாலின் நிறம் போல் கறுத்தும் வலிமையும் உவர்ப்புமுடைய கடலின் கண் அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனத்தில் இருந்த பயத்தை நீக்கிய தெய்வமே, அக்கினியின் சொருபமாகிய அருணாசலத்தில் வீற்றிருக்கும் கருணை கடாஷத்திற்கும் கற்புடமைக்கும் ஒப்புவமை இல்லாத பார்வதி தேவியின் குமாரனே, நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்.

Sunday, March 4, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் -51

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள 
றையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?
 
 பெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டுஅவர்கள் குளிக்கும் அறையில்குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன், பிறந்தால் தீட்டுஇறந்தால் தீட்டு என்றுசொல்கின்றீர்களே! இவ்வுடம்பில் உயிரில் உள்ள தீட்டோடுதானே ஈசன் பொருந்தி இருக்கின்றான். அதனை அறியாமல் தீட்டு என்று ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்?

Friday, March 2, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்-50


திருவள்ளுவ நாயனார்(பொய்யாமொழி புலவர் அல்ல ) தன் மனைவி இறந்தபோது இதனைப் பாடியதாகச் சொல்கின்றனர்.

அடிசிற் கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் – அடிவருடிப்
பின்தூங்கி முன்எழுந்த பேதையே போதியோ

என்தூங்கும் என்கண் இரா.

இனிய உணவு சமைத்துத் தருபவளே! என்மீது அன்பு கொண்டவளே! நான் (சொன்ன)படி தவறாமல் நடக்கும் (பொம்மலாட்டப் பொம்மைப்)பாவை போன்றவளே! என் கால்களை அமுக்கி என்னைத் தூங்க வைத்துவிட்டுப் பின்னர் தூங்கி நான் துயிலெழுவதற்கு முன்பே எழுந்து கடமைகளைச் செய்யும் பேதைப் பெண்ணே! நீ என்னை விட்டுவிட்டுப் போகிறாயா? இனி என் கண் இரவில் எப்படித் தூங்கும்?


Thursday, March 1, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 49

முத்தொள்ளாயிரம்
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் ஆகும். தலைவன் 
- தலைவி என்னும் இருபாலரில் ஒருவர் மட்டும் மற்றொருவரைக் 
காதலிப்பது (கை - சிறுமை அல்லது ஒரு பக்கம் ; கிளை - உறவு) 
பெரும்பாலும் தலைவனிடமே கைக்கிளை நிகழ்வதாகப் பாடல்கள் 
அமைகின்றன.






  • கைக்கிளை பாடல்

  •     இந்நூலின் பெரும்பாலான செய்யுட்கள் கைக்கிளை சார்ந்தன
    என்று பார்த்தோம். அவற்றுள் ஒன்றை இங்கு உதாரணமாகக்
    காணலாம்.

        பாண்டியன் நகர் வலம் வந்தான். அவனை ஒரு கன்னிப்
    பெண் கண்டாள். உடன் அவன்பால் மட்டில்லாக் காதல்
    கொண்டாள். அதன் காரணமாக உடல் முழுதும் பசலை படர்ந்தது.
    தன் உடம்பிலே பசலை படரக் காரணம் தன் கண்கள் அவனைக்
    கண்டமையே என்று எண்ணினாள். அவ்வாறெனில் அதற்குரிய
    தண்டனையை அடைய வேண்டியவை அக்கண்களல்லவா?
    ஆனால் அதற்கு மாறாக, ஒரு பாவமும் அறியாத அவள்
    தோள்களல்லவா தண்டனை பெற்றன! இஃது எவ்வாறு என்றால்
    உழுத்தஞ்செடி வளர்ந்த வயலில் மேய்ந்து அழிவு செய்த செயல்
    ஊர்க்கன்றுகளாக இருக்க, ஒன்றும் அறியாத கழுதையின் காதை
    அறுத்துத் தண்டித்தது போன்றது என்று நினைத்து வருந்தினாள்.
    இப்பொருள் அமைந்த பாட்டு வருமாறு:

    உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
    கழுதை செவி அரிந்தற்றால் - வழுதியைக்
    கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
    கொண்டன மன்னோ பசப்பு     (60)
    (செய் = வயல்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்;
    பசப்பு
     = மேனியில் தோன்றும் நிற வேறுபாடு)

    கொஞ்சி விளையாடும் தமிழ்

    பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...