Sunday, March 4, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் -51

சித்தர் சிவவாக்கியரின் சிந்தனைகள 
றையினில் கிடந்துபோது அன்று தூமை என்கிறீர்
துறை அறிந்து நீர் குளித்த அன்று தூமை என்கிறீர்
பறையறைந்து நீர் பிறந்த அன்று தூமை என்கிறீர்
புரை இலாத ஈசரோடு போருந்துமாறது எங்ஙனே?
 
 பெண்கள் அறையில் ஒதுங்கிக் கிடந்தால் தீட்டுஅவர்கள் குளிக்கும் அறையில்குளித்தால் தீட்டு, தாரைத் தப்பை சப்தத்துடன், பிறந்தால் தீட்டுஇறந்தால் தீட்டு என்றுசொல்கின்றீர்களே! இவ்வுடம்பில் உயிரில் உள்ள தீட்டோடுதானே ஈசன் பொருந்தி இருக்கின்றான். அதனை அறியாமல் தீட்டு என்று ஒதுக்குவதில் என்ன பயன் கண்டீர்கள்?

Friday, March 2, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்-50


திருவள்ளுவ நாயனார்(பொய்யாமொழி புலவர் அல்ல ) தன் மனைவி இறந்தபோது இதனைப் பாடியதாகச் சொல்கின்றனர்.

அடிசிற் கினியாளே அன்புடையாளே
படிசொல் தவறாத பாவாய் – அடிவருடிப்
பின்தூங்கி முன்எழுந்த பேதையே போதியோ

என்தூங்கும் என்கண் இரா.

இனிய உணவு சமைத்துத் தருபவளே! என்மீது அன்பு கொண்டவளே! நான் (சொன்ன)படி தவறாமல் நடக்கும் (பொம்மலாட்டப் பொம்மைப்)பாவை போன்றவளே! என் கால்களை அமுக்கி என்னைத் தூங்க வைத்துவிட்டுப் பின்னர் தூங்கி நான் துயிலெழுவதற்கு முன்பே எழுந்து கடமைகளைச் செய்யும் பேதைப் பெண்ணே! நீ என்னை விட்டுவிட்டுப் போகிறாயா? இனி என் கண் இரவில் எப்படித் தூங்கும்?


Thursday, March 1, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 49

முத்தொள்ளாயிரம்
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் ஆகும். தலைவன் 
- தலைவி என்னும் இருபாலரில் ஒருவர் மட்டும் மற்றொருவரைக் 
காதலிப்பது (கை - சிறுமை அல்லது ஒரு பக்கம் ; கிளை - உறவு) 
பெரும்பாலும் தலைவனிடமே கைக்கிளை நிகழ்வதாகப் பாடல்கள் 
அமைகின்றன.






  • கைக்கிளை பாடல்

  •     இந்நூலின் பெரும்பாலான செய்யுட்கள் கைக்கிளை சார்ந்தன
    என்று பார்த்தோம். அவற்றுள் ஒன்றை இங்கு உதாரணமாகக்
    காணலாம்.

        பாண்டியன் நகர் வலம் வந்தான். அவனை ஒரு கன்னிப்
    பெண் கண்டாள். உடன் அவன்பால் மட்டில்லாக் காதல்
    கொண்டாள். அதன் காரணமாக உடல் முழுதும் பசலை படர்ந்தது.
    தன் உடம்பிலே பசலை படரக் காரணம் தன் கண்கள் அவனைக்
    கண்டமையே என்று எண்ணினாள். அவ்வாறெனில் அதற்குரிய
    தண்டனையை அடைய வேண்டியவை அக்கண்களல்லவா?
    ஆனால் அதற்கு மாறாக, ஒரு பாவமும் அறியாத அவள்
    தோள்களல்லவா தண்டனை பெற்றன! இஃது எவ்வாறு என்றால்
    உழுத்தஞ்செடி வளர்ந்த வயலில் மேய்ந்து அழிவு செய்த செயல்
    ஊர்க்கன்றுகளாக இருக்க, ஒன்றும் அறியாத கழுதையின் காதை
    அறுத்துத் தண்டித்தது போன்றது என்று நினைத்து வருந்தினாள்.
    இப்பொருள் அமைந்த பாட்டு வருமாறு:

    உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
    கழுதை செவி அரிந்தற்றால் - வழுதியைக்
    கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
    கொண்டன மன்னோ பசப்பு     (60)
    (செய் = வயல்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்;
    பசப்பு
     = மேனியில் தோன்றும் நிற வேறுபாடு)

    Wednesday, February 28, 2018

    கொஞ்சி விளையாடும் தமிழ் - 48

    திருவள்ளுவ நாயனார் என்பவரின் (திருக்குறள் வள்ளுவர் அல்ல) தனிப்பாடல்களில் ஒன்று-


    எந்தவூரென்றீர் இருந்தவூர் நீர்கேளீர்
    அந்தவூர்ச் செய்தி அறியீரோ –அந்தவூர்
    முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்


    அப்பாலும் பாழென்று அறி .
    எந்த ஊர் என்றீர். நான் இருந்த ஊர் தாய் வயிற்று நீர். அந்த ஊரைப் பற்றிய செய்தி உங்களுக்குத் தெரியாதா? (எங்கும், என்றும், எதுவுமாக இருப்பவை மூன்று பாழ்-வெளிகள். அவை காலம், இடம், அறிவு என்பவை) இந்த மூன்று பாழ்-வெளியும் பாழாகி முடிவில் ஒரு சூனியமாய்ப் போய்விட்டது. அந்தப் பாழ்-வெளி மீண்டும் பாழாகி (பொருள், இடம், காலம்) என உரு எடுத்துள்ளது


    இந்தப் பாடலை நான் பார்த்ததும்,"காட்டு ரோஜா: "என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் வரிகளில் வந்த கீழ்கண்ட பாடல் ஞாபகம் வந்தது
    எவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல்..



    எந்த ஊர் என்றவனே
    இருந்த ஊரைச் சொல்லவா?
    அந்த ஊர் நீயும்கூட
    அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

    உடலூரில் வாழ்ந்திருந்தேன்
    உறவூரில் மிதந்திருந்தேன்
    கருவூரில் குடி புகுந்தேன்
    மண்ணூரில் விழுந்து விட்டேன்!

    கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
    கையூரில் வளர்ந்திருந்தேன்
    காலூரில் நடந்து வந்தேன்
    காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

    வேலூரைப் பார்த்து விட்டேன்
    விழியூரில் கலந்து விட்டேன்
    பாலூறும் பருவமென்னும்
    பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

    காதலூர் காட்டியவள்
    காட்டூரில் விட்டுவிட்டாள்
    கன்னியூர் மறந்தவுடன்
    கடலூரில் விழுந்துவிட்டேன்!

    பள்ளத்தூர் தன்னில் என்னை
    பரிதவிக்க விட்டு விட்டு
    மேட்டூரில் அந்த மங்கை
    மேலேறி நின்று கொண்டாள்!

    கீழுரில் வாழ்வதற்கும்
    கிளிமொழியாள் இல்லையடா
    மேலூரு போவதற்கும்
    வேளை வரவில்லையடா! (எந்த)

    தமிழின் விளையாட்டை ரசித்தீர்களா?

    Tuesday, February 27, 2018

    கொஞ்சி விளையாடும் தமிழ் - 47

    அத்தை மகள் மூட்டிய ஆசையைக் காய் காய் என்று ஒரு வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப் புலவர் வெண்பா.

    பாடல்

    கரிக்காய் பொரித்தாள்கன்னிக்காயைத் தீத்தாள்
    பரிக்காயைப் பச்சடியாய்ப்பண்ணாள் – உருக்கமுள்ள
    அப்பக்காய் நெய்துவட்டலாக்கினா ளத்தைமகள்
    உப்புக்காண் சீசீ யுமி. (51)

    கரிக்காய் பொரித்தாள் | காயைப் பொறித்தாள்
    கன்னிக்காயைத் தீத்தாள் | காயைத் தீயிலிட்டு வாட்டினாள்
    பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்  | காயைப் பச்சடி பண்ணினாள்
    உருக்கமுள்ள அப்பக்காய் நெய் துவட்டலாக்கினாள் | காயை நெய்யிலிட்டுத் துவட்டினாள்
    அத்தைமகள் | அவள் யாருமன்று, என் அத்தைமகள்
    உப்புக்காண் சீ சீ யுமி | அத்தனையிலும் உப்பு. சீ சீ உமிழ்ந்துவிடு.

    அகப்பொருள்
    உடலுறவுப் பொருள்

    கரிக்காய் பொரித்தாள் | கரித்துக் கொட்டி என்னை வறுத்தெடுத்தாள்
    கன்னிக்காயைத் தீத்தாள் | கன்னிப் பருவத்தைக் கழித்துவிட்டுப் பூப்பு எய்தினாள்
    பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்  | அத்தைமகனாகிய நான் பரிவு கொண்டு அவளுக்குப் பூப்பு-மனை கட்டித் தந்தேன். அவள் அந்தப் பச்சைப் பந்தல் அடியில் இருந்தாள்.
    உருக்கமுள்ள அப்பக்காய் நெய் துவட்டலாக்கினாள்| உருக்கமுள்ள அந்தப் பருவப்-பக்கத்தில் நெய்முழுக்கு ஆடினாள். பூப்பு நீராட்டுவிழா நடந்தது.
    அத்தைமகள் | அவள் வேறு யாருமன்று. என் அத்தைமகள்.
    உப்புக்காண் சீ சீ யுமி  | இந்த நிகழ்வுகள் எல்லாமே உடலில் உப்பு தோன்றுவதற்காக. அவளும் நானும் தழுவி எங்கள் உடம்பில் உப்பு தோன்றுவதற்காக. எங்கள் உணர்வு ஊறல்கள் சீய்த்துச் சீய்த்து ஒன்றில் ஒன்று உமிழ்ந்துகொள்வதற்காக.  

    Monday, February 26, 2018

    கொஞ்சி விளையாடும் தமிழ் - 46

    ஒட்டக்கூத்தனுக்கும், புகழேந்திக்கும் என்றுமே ஒத்துப்போகும் மனப்பான்மை இல்லை.ஒரு முறை புகழேந்தியை பழித்து சோழமன்னனிடம் ஒட்டக்கூத்தர் சொல்ல அதற்கு புகழேந்தி அளித்த பதில்..ஆகிய இரண்டையும் காணலாம்.

    இப்படிப்பட்ட தருணத்திலும், புலவர்களிடம் தமிழ் எப்படி விளையாடுகிறது பாருங்கள்..ரசியுங்கள்

    ஒட்டக்கூத்தன்
    மானிற்குமோ விந்தவாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
    கானிற்குமோ விவ்வெரியுந் தணன்முன் கனைகடலின்
    மீனிற்குமோ விந்தவெங்கண் சுறாமுனம் வீசுபனி
    தானிற்குமோ விக்கதிரவன் றோற்றத்திற் றார்மன்னனே. 
    சோழ மன்னனே! வேங்கை முன்னர் மான் நிற்குமோ? எரியும் தீ முன்னர் காய்ந்து போயிருக்கும் காடு நிற்குமோ? கொடிய சுறா-மீனின் முன்னர் கடல் வாழ் மீன் நிற்குமோ? கதிரவன் முன் வீசும் பனி நிற்குமோ? - அப்படித்தான் என் முன் புகழேந்தி.
    புகழேந்தி
    மானவனா னந்தவாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
    கானவனா னவ்வெரியுந் தணன்முன் கணைகடலின்
    மீனவனா னந்தவெங்கண் சறாமுனம் வீசுபனி
    தானவனா னக்கதிரவன் றோற்ற நற்றார் மன்னனே.
    மன்னா! அந்த வேங்கைமுன் மானவன் (மான்) நான். அந்த எரி முன் கானவன் (வேடன்) நான். அந்தச் சுறா முன் மீனவன் (மீனக்கொடி பறக்கும் நாட்டிலிருந்து வந்தவன்) நான். அந்தப் பனி முன் தானவன் (தானைத் தலைவன்) நான். தோன்றி எதிர்த்து நிற்பேன்.

    Sunday, February 25, 2018

    கொஞ்சி விளையாடும் தமிழ்- 45

    நாலடியார் பாடல் ஒன்று

    வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
    வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-
    வைகலும் வைசுற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்
    வைகலை வைத்துணரா தார்

    ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் வருவதன் மூலம், தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே வருகிறது என்பதை எண்ணிப் பார்க்காமல், நாள்தோறும் தங்கள் வாழ்நாள் வளர்ந்து வருகிறது என்றெண்ணி மயங்கும் மூடர்கள், வருகிற ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வை அறுக்கவரும் வாள் என்றறிய மாட்டார்கள்

    இப்பாடலில் வைகல் என்ற சொல் நாள் என்ற பெயரில் பல இடங்களில் வருவதால்
    இது சொல் பொருள் பின்வருநிலை அணியைச் சேர்ந்ததாகும் 



    கொஞ்சி விளையாடும் தமிழ்

    பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...