அடுத்த சில வரிகளில் விறலியரின் கூந்தல் (முடி) முதல் பாதம் (அடி) வரை புலவர் நத்தத்தனார் வருணனை செய்துள்ள அழகு நயமாக உள்ளது.
ஐது வீழ் இகு பெயல் அழகு கொண்டு அருளி
நெய் கனிந்து இருளிய கதுப்பின் கதுப்பு என
மணிவயின் கலாபம் பரப்பி பலவுடன் 15
மயில் மயில் குளிக்கும் சாயல் சாஅய்
உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ
வயங்கு இழை உலறிய அடியின் அடி தொடர்ந்து
ஈர்ந்து நிலம் தோயும் இரும் பிடித் தடக் கையின்
சேர்ந்து உடன் செறிந்த குறங்கின் குறங்கு என 20
மால் வரை ஒழுகிய வாழை வாழைப்
பூ எனப் பொலிந்த ஓதி (13-22)
ஐது வீழ் இகு பெயல்
உலகிற்கு அருள் செய்ய வல்ல, மெல்லியதாய் வீழ்கின்ற மழையைப் போன்ற அழகு உடைய கருமையான கூந்தல்.
மென்மெய்யாக வீழ்கின்ற மழை, அருள் செய்கின்ற மழை போன்று அவள் கூந்தல் இருக்கிறதாம்.
இங்கு ஆண்டாள் அருளிய திருப்பாவையின் 3ம் பாடலில் “தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து… என்று தீங்கில்லாமல் பெய்யும் மழை கூறப்பட்டுள்ளது நோக்குதற்குரியது.
கெடுக்கும் மழையை நாமறிவோம் அல்லவா?
விறலியரின் கூந்தலை மழை மேகம் என்று மயில்கள் நினைத்தன. அதனால் மகிழ்ச்சியாகத் தம் தோகையை விரித்து ஆடின. அவர் கண்கள் நீலமணி போன்றவை. எயிறு என்றால் பல். நுங்கின் இனிய நீர் போன்று சுவையை உடையதாக எயிற்று நீர் அமைந்துள்ளது. ஓடி இளைத்து வருந்துகின்ற நாயின் நாக்கைப் போன்ற பாதம். சிலம்பு முதலிய அணிகலன்கள் ஏதும் இன்றி அழகற்று இருக்கிறது. இப்படி கேசாதிபாதம் விறலியரின் அழகு வர்ணிக்கப்படுகிறது.வருமையும் காட்டப்படுகிறது.
இத்தகு அழகு வாய்ந்த விறலியரின் மென்மையான இயல்பையும் புலவர் குறிப்பிடத் தவறவில்லை. விறலியர், முல்லை சான்ற கற்பும், மெல்லியல்பும், மான் நோக்கும்,வாள் (ஒளி பொருந்திய) நுதலும் உடையவர் என்பதை,
முல்லை சான்ற கற்பின் மெல்லியல்
மடமான் நோக்கின் வாள்நுதல் விறலியர்
என்னும் அடிகள் சுட்டுகின்றன.
இங்கு பாடினியின் அழகுக்கு புலவர் காட்டும், அடுக்கி வரும் உவமை, அடுக்குவமை புதுமையானதும் அறிந்து மகிழத்தக்கதுமாகும்.
மழை போல் கதுப்பு
கதுப்பு போல் மயில்
மயில் போல் சாயல்
சாயல் போல் நாய்நாக்கு
நாய்நாக்கு போல் (கால்)அடி
அடிதோயும் யானைக்கை போல் குறங்கு (கால்தொடை)
குறங்கு போல் உயரும் வாழை
வாழைப்பூ போல் ஓதி (கொண்டை)
ஓதி போல் பூக்கும் வேங்கை
வேங்கைபு பூ உதிர்ந்து கிடப்பது போல் மேனியில் சுணங்கு
சுணங்கணிந்த கோங்கம் பூ போல் முலை
முலை போல் பெண்ணை (பனங்காய்)
பெண்ணை நுங்கு போல் வெண்ணிற எயிறு (வெண்பல்)
எயிறு போல் குல்லைப்பூ
குல்லை போல் முல்லை
முல்லை சான்ற கற்பு
இப்பாணர்கள் வறுமைக் காரணமாக விரலியருடன் தமக்கு யாரேனும் உதவமாட்டார்காளா என்று எண்ணியவாறு பாலை நிலம் தாண்டி இரவல் பெறும் நோக்கோடு போகிறார்கள்.
மெதுவாகத் துளித்துளியாக மழை பெய்கின்ற காலத்துத் தோன்றுகின்ற மேகத்தின் அழகினைப் பெற்றிருக்கும் எண்ணெய் தேய்க்கப்பட்ட இருண்ட கூந்தலினை உடையவள் விறலி. நீல மணிபோலும் நிறமுடைய தோகையினை ஆண்மயில்கள் பலவும் சேர்ந்து விரித்து ஆடியபோதும் இவளின் (விறலியின்) கூந்தல் அழகினுக்கு ஒப்பாகாமைக் கண்டு வெட்டகமுற்று, பெண்மயில்கள் கூட்டத்தினுள் சென்று மறைவதற்குக் காரணமான அழகினை உடையவள். பனஞ்சிறாம்பு நிறமுடைய ஓடி இளைத்த நாயின் நாக்குப் போல நல்ல அழகினைப் பெற்று, அணிகலன்கள் அணியப்பெறாதப் பாதத்தினைக் கொண்டவள். பாதத்தினைத் தொடர்ந்து கருமையான பெண் யானையின் தரையில் படுகின்ற துதிக்கை போல், ஒன்றுடன் ஒன்று நெருங்கிய தொடையினை உடையவள். இவளின் கூந்தல் முடிப்பு, மேகங்கள் தங்குகின்ற மலையில் உள்ள வாழை மரத்தின் பூப்போன்றது