திரு அருட்பா - வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார்
சக மனிதன் துன்பப் படுவதை கண்டும் கூட கண்டும் காணமல் போகும் காலம் இது.
மனிதன் அல்ல, ஐந்தறிவு கொண்ட விலங்கு கூட அல்ல, தண்ணீர் இல்லாமல் வாடிய பயிரை கண்டு உள்ளம் வாடினார் வள்ளலார்.
மற்றவர்கள் துன்பத்தை கண்டு வருத்தப் படுவது எல்லோருக்கும் எளிதான ஒன்று தான்.
அந்த துன்பத்தை போக்க ஏதாவது செய்வது தான் கடினம்.
மனிதனுக்கு வரும் பெரிய துன்பம் பசி துன்பம் தான். அந்த துன்பத்தை போக்க வல்லாளர் அணையாத அடுப்பை கொண்ட உணவு சத்திரத்தை நிறுவினார்.
வடலூரில் அந்த உணவு சாலை இன்றும் இயங்கி கொண்டு இருக்கிறது.
அவர் மறைந்த பின்னும் அவர் நிறுவிய அந்த சத்திரம் மக்களின் பசிப் பிணியை நீக்கிக் கொண்டு இருக்கிறது.
அவருடைய மனித நேயத்திற்கு இந்த பாடல் ஒரு சாட்சி.....
வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”
------------------------------------------------------------------------------------
வாடிய பயிரைக் = நீரில்லாமல், வெயிலில் வாடிய பயிரை
கண்டபோ தெல்லாம் வாடினேன் = கண்டபோதெல்லாம் வாடினேன். எப்பவோ ஒருமுறை அல்ல, ஒவ்வொருமுறை வாடிய பயிரை கண்டபோதும் வாடினேன்
பசியினால் இளைத்தே = பசியினால் இளைத்து, உடல் மெலிந்து
வீடுதோ றிரந்தும் = வீடு தோறும் இரந்தும் (பிச்சை பெற்றும்)
பசியறா தயர்ந்த = பசி அறாது அயர்ந்த = பசி விலகாமல் சோர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் = ஒன்றும் இல்லாதவர்களை கண்டு உள்ளம் பதைத்தேன்
நீடிய பிணியால்= நீண்ட நாள் நோயால்
வருந்துகின்றோர் = வருத்தப் படுகிறவர்
என் நேர் உறக்கண்டுளந் துடித்தேன் = என் முன்னால் வரும் போது அவர்களை பார்த்து உள்ளம் துடித்தேன்
ஈடின் = ஒப்பு இல்லாத
மானிகளாய் = மானம் உள்ளவர்கள் கஷ்டப் பட்டாலும் மற்றவர்களிடம் போய் உதவி கேட்க மாட்டார்கள்.
ஏழைகளாய் = அப்படிப் பட்ட ஈடின் மானிகள் ஏழைகளாய்
நெஞ் சிளைத்தவர் = நெஞ்சம் இளைத்தவர்களை
தமைக்கண்டே= அப்படி பட்ட மக்களை கண்டு
இளைத்தேன் = நானும் இளைத்தேன்
No comments:
Post a Comment