Thursday, August 1, 2019

தாயுமானஸ்வாமி, தாம் உயர்ந்த துறவு பூண்டிருந்த போதிலும், இதைனப் பின்வரும் பாடலில் அங்கீகாரம் செய்கிறார். அதாவது, முற்றிலும் அங்கீகாரம் புரிய
வில்லை. துறவறத்தைக் காட்டிலும் இல்லறமே சிறந்ததென்று அவர்  உரைத்துவிடவில்லை. முக்திக்கு இரண்டும் சமசாதனங்கள் என்கிறார்.
தாயுமானவர் சொல்லுகிறார் -

''மத்த மத கரி முகிற் குல மென்ன நின்றிலகு
வாயிலுடன் மதி யகடு தோய்
மாடகூடச் சிகர மொய்த்த சந்திரகாந்த
மணிமேடை யுச்சிமீது
முத்தமிழ் முழக்கத்துடன் முத்து நகையார்களொடு
முத்து முத்தாய்க் குலாவி
மோகத் திருந்து மென்? யோகத்தினிலைநின்று
மூச்சைப் பிடித் தடக்கிக்
கைத்தல நகைப்படை விரித்த புலி சிங்க மொடு
கரடி நுழை நூழை கொண்ட
கான மலை யுச்சியிற் குகை யூடிருந்து மென்?
கர தலாமலக மென்ன
சத்த மற மோன நிலை பெற்றவர்களுய்வர் காண்!
ஜனகாதி துணிவி தன்றோ?
சர்வபரிபூரண அகண்டதத்துவமான
சச்சிதானந்த சிவமே''

இதன் பொருள் யாதெனில் =

'மதமேறிய யானைகள் மேகக் கூட்டங்களைப் போல் மலிந்து நிற்கும் வயல்களையுடைய அரண்மனையில், சந்திரனை அளாவுவன போன்ற உயரமுடைய
மாடங்களும் கூடங்களும் சிகரங்களும் சூழ்ந்திருப்ப, அவற்றிடையே நிலா விளையாட்டுக்காகச் சமைக்கப்பட்டிருக்கும் சந்திரகாந்த மேடைகளின் மேலே இனிய
தமிழ்ப் பேச்சுக்கும் இனிய தமிழ் பாட்டுக்கும் நாட்டியங்களுக்கு மிடையே முத்தாக உரையாடி முத்தமிட்டு முத்தமிட்டுக் குலாவிக் காதல் நெறியில்
இன்புற்றிருந்தாலென்ன? அஃதன்றி, யோக வாழ்விலே சென்று மூச்சை அடக்கிக் கொண்டு ஆயுதங்களைப் போல் வலிய நகங்களையுடைய புலி, சிங்கம், கரடி
முதலியன பதுங்கிக் கிடக்கும் பொந்துகளுடைய காட்டுமலையுச்சியில் தாமொரு பொந்தில் இருந்தாலென்ன? உள்ளங்கை நெல்லிக்கனி போல விளங்குவதோர்
உண்மை கூறுகின்றோம். 
'சலனமின்றி மனத்திலே சாந்தநிலை பெற்றோர் உய்வார்' இஃதன்றோ ஜனகன் முதலியோரின் முடுபாவது? எங்கும் நிறைவற்றதாய்ப் பிரிக்கப்படாத
மூலப்பொருளே! அறிவும், உண்மையும், மகிழ்ச்சியும் ஆகிய கடவுளே?'

இங்ஙனம், இல்லறத்தைப் பந்தத்துக்கு அதாவது, தீராத துக்கத்துக்குக் காரணமென்றும், துறவறம் ஒன்றே மோக்ஷத்துக்குச் சாதனமென்றும், கூறும் வேறு சில
துறவிகளைப்போலே சொல்லாமல், இரண்டும் ஒருங்கே மோக்ஷத்துக்குச் சமமான சாதனங்கள் என்று சொல்லியதே நமக்குப் பெரிய ஆறுதலாயிற்று. சம்சார

துறவிகளுக்குள்ளே பட்டினத்துப் பிள்ளை சிறந்தவரென்று தாயுமானவர் பாடியுள்ளார். அந்தப் பட்டினத்துப் பிள்ளை என்ன சொல்லுகிறார்?

"அறந்தா னியற்றும் அவனிலுங் கோடியதிக மில்லந்
துறந்தான் அவனிற் சதகோடி யுள்ளத் துறையுடையான்
மறந்தா னறக் கற்றறிவோ டிருந்திரு வாதனையற்
நிறந்தான் பெருமையை என் சொல்லுவேன் கச்சியே கம்பனே"

இல்லத் துறவைக் காட்டிலும் உள்ளத் துறவு சககோடி மடங்கு மேலென்று மேலே பட்டினத்தடிகள் சொல்லுகிறார். பட்டினத்தடிகள் தாம் துறவியாதலால்
இங்ஙனம் கூறினார்

Tuesday, July 23, 2019

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பு சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே!

அன்பும்,சிவமும் வேறானவை என்று ஒருவர் சொன்னால்,அவர் ஒன்றும் அறியாதவர் ஆவார்.அன்புதான் சிவம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.அன்புதான் சிவனை அறியும் வழி என்பதை ஒருவர் அறிந்த பின் அன்பானவராய் இருப்பார்.சிவத்தன்மை அடைவார்


Friday, July 19, 2019

திரு அருட்பா - வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார்

சக மனிதன் துன்பப் படுவதை கண்டும் கூட கண்டும் காணமல் போகும் காலம் இது. 

மனிதன் அல்ல, ஐந்தறிவு கொண்ட விலங்கு கூட அல்ல, தண்ணீர் இல்லாமல் வாடிய பயிரை கண்டு உள்ளம் வாடினார் வள்ளலார்.

மற்றவர்கள் துன்பத்தை கண்டு வருத்தப் படுவது எல்லோருக்கும் எளிதான ஒன்று தான்.

அந்த துன்பத்தை போக்க ஏதாவது செய்வது தான் கடினம்.

மனிதனுக்கு வரும் பெரிய துன்பம் பசி துன்பம் தான். அந்த துன்பத்தை போக்க வல்லாளர் அணையாத அடுப்பை கொண்ட உணவு சத்திரத்தை நிறுவினார்.

வடலூரில் அந்த உணவு சாலை இன்றும் இயங்கி கொண்டு இருக்கிறது. 

அவர் மறைந்த பின்னும் அவர் நிறுவிய அந்த சத்திரம் மக்களின் பசிப் பிணியை நீக்கிக் கொண்டு இருக்கிறது.

அவருடைய மனித நேயத்திற்கு இந்த பாடல் ஒரு சாட்சி.....





வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

------------------------------------------------------------------------------------

வாடிய பயிரைக் = நீரில்லாமல், வெயிலில் வாடிய பயிரை

கண்டபோ தெல்லாம் வாடினேன் = கண்டபோதெல்லாம் வாடினேன். எப்பவோ ஒருமுறை அல்ல, ஒவ்வொருமுறை வாடிய பயிரை கண்டபோதும் வாடினேன்


பசியினால் இளைத்தே = பசியினால் இளைத்து, உடல் மெலிந்து


வீடுதோ றிரந்தும் = வீடு தோறும் இரந்தும் (பிச்சை பெற்றும்)

பசியறா தயர்ந்த = பசி அறாது அயர்ந்த = பசி விலகாமல் சோர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் = ஒன்றும் இல்லாதவர்களை கண்டு உள்ளம் பதைத்தேன்

நீடிய பிணியால்= நீண்ட நாள் நோயால்

வருந்துகின்றோர் = வருத்தப் படுகிறவர்

என் நேர் உறக்கண்டுளந் துடித்தேன் = என் முன்னால் வரும் போது அவர்களை பார்த்து உள்ளம் துடித்தேன்

ஈடின் = ஒப்பு இல்லாத

மானிகளாய் = மானம் உள்ளவர்கள் கஷ்டப் பட்டாலும் மற்றவர்களிடம் போய் உதவி கேட்க மாட்டார்கள்.

ஏழைகளாய் = அப்படிப் பட்ட ஈடின் மானிகள் ஏழைகளாய்

நெஞ் சிளைத்தவர் = நெஞ்சம் இளைத்தவர்களை 

தமைக்கண்டே= அப்படி பட்ட மக்களை கண்டு 

 இளைத்தேன் = நானும் இளைத்தேன்

Tuesday, July 16, 2019

கொஞ்சி  விளையாடும் தமிழ் என நான் எழுதி வருகிறேன்.என் தமிழ் பல கவிஞர்கள் , எழுத்தாளர்கள் படைப்பில் குழந்தையாய், குழந்தை பேசும் மழலையாய் நம் செவிகளுக்கும், மனதிற்கும் இன்பம் அளித்து இனிக்கும் தமிழாய் உள்ளது.

ஆனால், பாவேந்தர் பாரதிதாசனுக்கோ..அவரின் உயிராகவே இருக்கிறது.

அவரின் தமிழின் இனிமை கவிதை ஒன்றைப் பாருங்கள்..

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்

என் கிறார்

ஆமாம்...எனினும் என்கிறாரே,,,ஏன்? என ஒரு நிமிடம் சிந்தியுங்கள்..
உயிர் இல்லையேல் ஒருவருக்கு சுவைக்க இனிப்பு ஏது?
கனி, கரும்பு, தேன்,பாகு,பால்,இளநீர் என அனைத்தின் சுவையும் உயிர் இருந்தால்தானே அறிய முடியும்.அந்த உயிர் எனக்குத் தமிழ் என்றுள்ளார்.

Tuesday, July 2, 2019

திருமூலர் திருமந்திரப்பாடல்

பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும் அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே. சிவனின் அடிப்படை தாத்பர்யமே அணு என்று சொல்கிறார்கள். அணுவை விளங்கிக்கொள்ள உருவாக்கிய வரைபடம் லிங்க உருவம் என்று சொல்லுவதும் மிகையில்லை.
தமிழில் அணுவை குறித்து பல பதங்கள் காணக்கிடைக்கிறது. இதிலிருந்தே அணுவை பகுத்து பெயரிட்டது விளங்கும். பல வார்தைகள் இருந்தாலும் மூன்று வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் கோண், பரமாணு, இம்மி .
கோண் என்பது மிக நுண்ணிய அளவு. இதை விடச்சிறிய அளவு பரமாணு இதை விடச்சிறிய அளவு இம்மி.
இப்பிரபஞ்சம் முழுமையும் அணுக்களால் நிரம்பியது என்று அன்றே சொன்னார்கள். வெளிப்படையான குறியீடுகளையும் சமன்பாடுகளையும் வகுக்காமல் விட்டுவிட்டார்கள்.
திருமூலர் எழுதிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு குறித்த ஞானம் உடையவர்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.


“அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே”
~ திருமந்திரம் (திருமூலர்)
பொருள்:
தவ யோகி தன் உயிரின் அணுவை அதில் மறைந்து இயங்கும் ஆதிப் பிரானின் அணுவை அணுக முயல்கிறான். தன் அக ஆராய்ச்சியில் உயிர் அணுவை தன் நுண் அறிவால் ஆயிரம் கூறு இட்டு துளைத்து ஆராய்ந்து ஆன்மாவில் சிவத்தின் தன்மையை அணுக வல்லமை கொள்கிறான். இங்ஙனம் ஆராய்ச்சி கொண்டவர்க்கு தன் ஆன்ம அணுவில் மூல அணுவோடு அணுகலாம்.
(இதன் சுருக்கமான பொருள் “நுண்மையான சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்”)

Sunday, June 30, 2019

நல்வழி

நல்வழி பாடல் ஒன்று

ஆவாரை யாரே அழிப்பர்? அதுவன்றிச்
சாவாரை யாரே தவிர்ப்பவர்?- ஓவாமல்
ஐயம் புகுவாரை யாரே விலக்குவார்
மெய்யம் புவியதன் மேல்.

அழகிய பூமியில் வாழ்வாரை அழிக்க வல்லவர் யாவர்? ஒருவராலும் முடியாது; ஏனெனில், அது அவரவர் செய்த நல்வினை தீவினைகளால் விதிக்கப்பட்டது.
அதுவல்லாமல், இறந்துபோகும் விதியுடையவரை யாரால் காப்பாற்ற முடியும்.
ஒருவராலும் முடியாது. பிச்சைக்கு செல்வாரை தடுக்கவல்லவர் யாவர். இஃது உண்மையாகும். எப்போதும் (ஓயாமல்) ஏதேனும் ஒன்றுபற்றிச் சந்தேகம் கொள்பவரை யாரால் தெளிவிக்க முடியும்; ஒருவராலும் முடியாது; அது அவரவர் விதி.
ஊழால் வரும் நன்மை தீமைகளைத் தவிர்க்க வல்லவர்கள் இல்லை.

Sunday, June 2, 2019

கொஞ்சி விளையாடும் தமிழ் - 58

தமிழில் பலவகைப் பாடல்கள் உண்டு.அவற்றில் நமது புத்திக்கு வேலை கொடுக்கும் பாடல்களும் உண்டு.

உதாரணத்திற்கு, காளமேகப் புலவரின் இப்பாடலைக் காண்போம்..

பூனைக்கு ஆறுகால் புள்ளினத்துக்கு ஒன்பதுகால்
ஆனைக்குக் கால் பதினேழு ஆனதே - மானேகேள்
முண்டகத்தின் மீது முழுநீலம் பூத்ததுண்டு
கண்டதுண்டு கேட்டதில்லை காண்

இதற்கான அர்த்தம்...

பூவிலே அமர்ந்து தேனை நக்கிக் குடிக்கின்ற வண்டுகளுக்கு (பூ நக்கி) ஆறு கால்கள்

புள் எனில் பறவை.பறவைகளுக்கு ஒன்பது கால்...அதாவது 9 x1/4  = இரண்டே கால் அல்லவா?

அதுபோல யானைக்கு 17x 1/4 =நாலே கால்..

கணக்கு சரிதானே!

இனி அடுத்த வரிகளுக்குச் செல்வோம்....

தாமரை மலரின் மீது முழு நீல மலர்கள் பூத்ததைப் பார்த்தவர் உண்டு கேட்டவர்கள் இல்லை...இதுவே கடைசி இரு வரிகளுக்கானப் பொருள்..

ஆனால்...இன்னமும் விளங்கவில்லை அல்லவா? அது என்ன பார்த்தவர்..கேட்டவர் என்கிறீர்களா?

முண்டகம் என்பது தாமரை
முழுநீலம் என்பது குவளை மலர்கள்

தாமரைப் பூவின் நடுவே குவளைப்பூக்கள் பூத்திருப்பதைப் பார்த்திருக்கிறோம்! ஆனால், இதைக் கேள்விப்படுபவர் நம்புவார்களா?

தாமரைப் பூவில் கருநீலப் பூக்கள் எப்படிப் பூக்கும்?

இங்கு தாமரை மலர் என்பது பெண்ணின் முகத்தைக் குறிப்பதாகும்

கருநீல குவளைப்பூக்கள் அம்முகத்தில் உள்ள கண்களைக் குறிக்கின்றன

பெண்கள்..பூவிலே பூத்த பூக்கள்...

அடடா...என்ன ஒரு கற்பனை? 

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...