Thursday, February 8, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்-32

நாரையைத் தூது அனுப்பியப் புலவரின் பாடலை பாண்டிய மன்னன் மாறன் வழுதி நகர்வலம்  வரும் போது கேட்டான்.புலவருக்கு பரிசிலை  அளித்தான்.
அப்போது புலவர் பாடுவதைக் காணுங்கள்


வெறும்புற் கையுமரிதாங் கிள்ளைசோறும் என்வீட்டில் வரும்
எறும்புக்கு மாற்பதமில்லை முன்னாளென் னிருங்கலியாம்
குறும்பைத் தவிர்த்த குடிதாங்கியைச் சென்று கூடியபின்
தெறும்புற் கொல்யானை கவளம் கொள்ளாமற் றெவுட்டியதே

வெறும் சோறு பொங்குவது கூட அரிதாகிவிட்ட தன் வறுமை சூழலில், கிளிப்பிள்ளைக்கும் எறும்புக்கும் கூட போதுமானதாக இருக்காது என் வீட்டிலிருக்கும் உணவு. அத்தகைய வறுமையின் பிடியில் இருந்த எனக்கு குடிதாங்கியான மன்னனை கூடிய பின் அவனளித்த பரிசில் யானையின் கவளம் கொள்ளாத அளவுக்கு தன் நிலையை உயர்த்தியதாக கூறுகிறார்.

Wednesday, February 7, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 31

நாராய் நாராய் செங்கால் நாராய்
பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன
பவளக் கூர்வாய் செங்கால் நாராய்
நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி
வடதிசைக்கு ஏகுவீராயின்
எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி
நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி
பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு
எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்
ஆடையின்றி வாடையில் மெலிந்து
கையது கொண்டு மெய்யது பொத்தி
காலது கொண்டு மேலது தழீஇப்
பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்
ஏழையாளனைக் கண்டனம் எனுமே


~ சத்திமுத்தப் புலவர் ~



நாரையே நாரையே, செந்நிற கால்களை உடைய நாரையே.. பழங்களை உடைய பனையின் கிழங்கு பிளந்ததை ஒத்த, பவழம் போன்ற நிறத்தினை கொண்ட, கூரிய அலகுகளை கொண்ட செங்கால் நாரையே.. நீயும் உன் மனைவியும் தென் திசையில் உள்ள குமரியில் நீராடி வட திசைக்குச்  செல்வீர்களாயின் எனது ஊரான சத்திமுத்தத்தில் உள்ள குளத்தில் தங்கி, நனைந்த சுவர்களை உடைய தன் வீட்டின் கூரையில் இருந்து கனைக்கும் பல்லியின் குரலை கேட்டு பாடு பார்த்திருக்கும் என் மனைவியை கண்டு, "மாறன் அரசாளும் கூடலில் - ஆடையின்றி, வாடைக்காற்றில் மெலிந்து, கைகளை கொண்டு மார்பினை மறைத்து, கால்களை கொண்டு உடலை தழுவி, பேழைக்குள் இருக்கும் பாம்பினைப் போலச் சுருண்டு உயிர்த்திருக்கும் இந்த ஏழையை கண்டேன்" என உரைக்குமாறு நாரையை தூது விடுகிறார்.






இப்புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. எனவே அவரது ஊராகிய சத்திமுத்தத்தின் பெயரால் அறியப்படுகிறார்.  புலவர் தன் வறுமை காரணமாய் வேறோர் ஊருக்குச் சென்றிருந்த வேளையில் அங்கோர் நாரையை தன் மனைவிக்கு தூதாய் அனுப்புவதாக அமைந்துள்ள தனிப் பாடல். கவித்துவமும் அழகும் நிறைந்த இப்பாடல் பிற மரபுச் செய்யுள் போலன்றி நேரடியாகப் பொருள் தருகிறது. சொல்லப்படாத பல செய்திகளையும் சொல்கிறது.

கொஞ்சி விளையாடும் தமிழ் - 30


நம்மாழ்வாரின் திருவாய்மொழியில் விளையாடும் தமிழ்
அவரவர் தமதமது அறிவு அறி வகைவகை
அவரவர் இறையவர் என அடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவு இலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே 
ஒவ்வொருவரும் அவரவர் அறிவுக்கு எட்டிய இறைவன் திருவடிகளை அடைவார்கள். எந்த இறைவனும் குறையில்லாதவன். அவரவர் விதிப்படி அவரவர் இறைவனை அடைவார்கள்.
உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள்
உளன் அலன் எனில் அவன் அருவம் இவ் அருவுகள்
உளன் என இலன் என இவை குணம் உடைமையில்
உளன் இரு தகைமையொடு ஒழிவு இலன் பரந்தே. 
இறைவன் உள்ளான் என்றால் உள்ளான். உளன் அலன் (இல்லை) என்றால் இல்லை. உள்ளவனாகவும், இல்லாதவனாகவும் ஒழிவில்லாமல் எங்கும் பரந்துகிடக்கிறான்.

Tuesday, February 6, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 29

இந்தப் பாடலை பாருங்கள்:
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே
இந்தப்பாடலின் அர்த்தம் என்ன?
தமிழ்த்தாத்தா உவேசாமிநாதய்யர் தம்முடைய ஆசிரியராகிய மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடம் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு விடுகவியை யாரோ சொல்லியிருக்கிறார்கள். அந்த விடுகவிக்கு யாராலும் ரொம்ப காலமாகப் விளக்கம் சொல்லமுடியவில்லை. அந்தவாறே அது பலகாலமாக உலவிக்கொண்டு வந்திருக்கிறது. எத்தனை நூற்றாண்டுகள் ஆயினவோ தெரியவில்லை.
இந்தப் பாடலை பிள்ளையவர்களிடம் சொல்லிப் பொருள் கேட்டபோது மிக விரைவாக அநாயாசமாக எளிதாகப் பொருள் சொல்லிவிட்டார்.
இந்த நிகழ்ச்சியை ஐயரவர்கள் தம் ஆசிரியரைப் பற்றி எழுதியுள்ள வரலாற்று நூலில் காணலாம்.

இப்பாடலில் காணி, காணி என 18 முறை வருகிறது. இதனுடன் பாடல் வரிகளில் கடைசியாக கால் (1/4) என்றும், முக்கால்(3/4) மற்றும் நால் (இதை நான்கு கால் என்று கொள்ள வேண்டும்= 1/4+1/4+1/4+1/4=1) என்று கூட்டினால் (1/4)+(3/4)+(1/4+1/4+1/4+1/4)=2(இரண்டு) வருகிறது. ஆக மொத்தம் 18+2=20 இருபது காணி என்று வருகிறது . தமிழ்க் கணக்கில் காணி என்றால் 1/80 (எண்பதில் ஒரு பாகம்) எனப்படும். அதனால் இருபது காணி என்றால் 20*(1/80)=20/80=1/4 கால் என்று வருகிறது. எனவே "சிவபெருமானின் காலை காட்டும் கழுக்குன்றே" என்று மிக அற்புதமாக நமக்கு உணர்த்தியுள்ளார் புலவர்.

Sunday, February 4, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 28

கொஞ்சி விளையாடும் தமிழ்

இறைக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக அக்கால சித்தர்கள் முதல் இக்கால ஆன்மீக வாதிகள் கருதுகின்றனர். அதைப்பற்றிய ஒரு ஓப்பீடு.



முத்தி தருபவன் அவனே ; ஞானம் தருபவன்அவனே ;ஞானமாய் விளங்குபவனும் அவனே ; பாலில் கலந்துள்ள நெய்போல் காணும் பொருளிலெல்லாம் கரந்துள்ளான்"



எனத் திருமூலர் இறைவனைப் போற்றும் போது " முத்தமிழாகவும் விளங்குகிறான் " எனக் குறிக்கின்றார். எல்லாமாய் விளங்கும் இறைவன் தமிழாகவும் விளங்குகின்றான். எல்லாவற்றிலும் சுரந்துள்ளவன், தமிழுள்ளும் கரந்துள்ளான். முக்தியும், ஞானமும் விழுமியன. அவற்றோடு தமிழையும் வைத்துப் போற்றுகின்றார்.





"முத்தியை ஞானத்தை முத்தமிழ் ஓசையை

எத்தனை காலமும் ஏத்துவர் ஈசனை

நெய்தலைப் பால்போல் நிமலனும் அங்குளன்

அத்தகு சோதியது விரும்பாரன்றே "- திருமந்திரம்

Saturday, February 3, 2018

கொஞ்வி விளையாடும் தமிழ் - 27

கணியன் பூங்குன்றனார் என்பவர் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். 

இவரின் புறநானூற்றுப் பாடல் பழங்காலத் தமிழர்களின் பண்பாட்டை விளக்குகிறது.
யாதும் ஊரே யாவரும் கேளிர்
தீதும் நன்றும் பிறர்தர வாரா
நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன
சாதலும் புதுவது அன்றே, வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே முனிவின்
இன்னா தென்றலும் இலமே, மின்னொடு
வானம் தண்துளி தலைஇ யானாது
கல் பொருது மிரங்கு மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆருயிர்
முறை வழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியில் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே,
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. 

பொருள்

எல்லா ஊரும் எம் ஊர் எல்லா மக்களும் எம் உறவினரே
நன்மை தீமை அடுத்தவரால் வருவதில்லை
துன்பமும் ஆறுதலும்கூட மற்றவர் தருவதில்லை
சாதல் புதுமை யில்லை; வாழ்தல்
இன்பமென்று மகிழ்ந்தது இல்லை
வெறுத்து வாழ்வு துன்பமென ஒதுங்கியதுமில்லை
பேராற்று நீர்வழி ஓடும் தெப்பம்போல
இயற்கைவழி நடக்கும் உயிர்வாழ்வென்று
தக்கோர் ஊட்டிய அறிவால் தெளிந்தோம்
ஆதலினால்,பிறந்து வாழ்வோரில்
சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை
பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை.

கொஞ்சி விளையாடும் தமிழ் - 26

.


நமது அந்திம காலம்.காலன் நம்மை அழைத்துச் செல்ல வருகிறான்.அப்போது ..நமது சுற்றம் அழுது கொண்டிருக்கும்.அதுபோன்ர நிலை வரும் போது என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

அருணகிரிநாதர் சொல்கிறார்

தந்த பசிதனைய றிந்து முலையமுது
தந்து முதுகுதட...வியதாயார்

தம்பி பணிவிடைசெய் தொண்டர் பிரியமுள
தங்கை மருகருயி... ரெனவேசார்

மைந்தர் மனைவியர்க டும்பு கடனுதவு
மந்த வரிசைமொழி... பகர்கேடா

வந்து தலைநவிர விழ்ந்து தரைபுகம
யங்க வொருமகிட...மிசையேறி

அந்த கனுமெனைய டர்ந்து வருகையினி
லஞ்ச லெனவலிய...மயில்மேல்நீ

அந்த மறலியொடு கந்த மனிதனம
தன்ப னெனமொழிய...வருவாயே

சிந்தை மகிழமலை மங்கை நகிலிணைகள்
சிந்து பயமயிலு...மயில்வீரா

திங்க ளரவுநதி துன்று சடிலருள்
செந்தி னகரிலுறை...பெருமாளே



பதம் பிரித்து பொருள் பார்க்கலாம்:

தந்த பசிதனை அறிந்து = குழந்தையின் பசியினை அறிந்து

முலை அமுது தந்து = மார்போடு அணைத்து அதன் பசி போக்கி

முதுகு தடவிய தாயார் = ஏப்பம் வர வேண்டி அதன் முதுகை தடவித்தரும் தாயார்

தம்பி = உடன் பிறந்த தம்பி

பணிவிடைசெய் தொண்டர் = பணிவிடை செய்யும் வேலை ஆட்கள்

பிரியமு தங்கை = அன்பான தங்கை

மருக (ர்) = மருமகன் மற்றும் மருமகள்

உயிரனவே = உயிரைப் போல

சார் = சார்ந்து இருக்கும்

மைந்தர் = பிள்ளைகள்

மனைவியர் = மனைவி

கடும்பு = சுற்றத்தார்

கடன் = கடமை 

உதவும் அந்த = அந்த உறவுக் கடமையை செய்வதற்காக 

வரிசை = வரிசையாக

மொழி பகர் கேடா = தங்கள் குறைகளை சொல்லி (நாம் இறந்த பின், நம் நன்மைகளைக் கூறி)

வந்து = அந்த குறையை சொல்ல வந்து

தலை நவிர் அவிழ்ந்து = தலை முடி அவிழ்ந்து

தரை புக மயங்க = தரையில் மயங்கி விழுந்து

ஒரு = ஒரு 

மகிட மிசையேறி = எருமை மாட்டின் மேல் ஏறி

அந்தகனும் = குருடன் (எமனை குருடன் என்று சொல்வது வழக்கம். நல்லவர் கெட்டவர், தாய்க்கு ஒரு மகன் என்று எந்த பேதமும் பார்க்க மாட்டான்....எனவே குருடன்)

எனை அடர்ந்து வருகையில் = என்னை பிடிக்க வருகையில்

அஞ்சல் என = அஞ்சேல் என



வலிய = வலிமை பொருந்திய

மயில்மேல் = மயில் மேல்

நீ = முருகனாகிய நீ

அந்த மறலியொடு = அந்த எமனிடம்

உகந்த மனிதன் = வேண்டிய மனிதன் (நம்ம ஆளு)

நமது அன்பன் = என்னுடைய (முருகனின்) அன்பன்


என மொழிய = என்று சொல்ல

வருவாயே = வருவாயே

சிந்தை மகிழ = மனம் மகிழ

மலை மங்கை = மலை மகள், பார்வதி

நகிலிணைகள் = மார்பின் மேல்

சிந்து பயமயிலு = விளையாடும்

மயில்வீரா = மயில் மேல் ஏறிய வீரனே

திங்கள் = நிலவு (பிறை நிலவு)

அரவு = பாம்பு

நதி = கங்கை நதி

துன்று = ஒன்றாக உள்ள

சடில = ஜடா முடி உடைய (சிவன்)

அருள் = அருளிய

செந்தில் = திருச் செந்தூரில் 

உறை = வாழும்

பெருமாளே = பெறும் ஆளே (நம்மை பெற்றுக் கொள்பவன், நாம் எப்படி இருந்தாலும், நாம் நம்மை அவனுக்குத் தந்தால், நம்மை வெறுக்காமல், பெற்றுக் கொள்பவன் = பெறும் ஆள் = பெருமாள், பெரிய ஆள் = பெருமாள்)

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...