இந்தப் பாடலை பாருங்கள்..
:
:
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே
இந்தப்பாடலின் அர்த்தம் என்ன?
தமிழ்த்தாத்தா உவேசாமிநாதய்யர் தம்முடைய ஆசிரியராகிய மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடம் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு விடுகவியை யாரோ சொல்லியிருக்கிறார்கள். அந்த விடுகவிக்கு யாராலும் ரொம்ப காலமாகப் விளக்கம் சொல்லமுடியவில்லை.
இந்தப் பாடலை பிள்ளையவர்களிடம் சொல்லிப் பொருள் கேட்டபோது மிக விரைவாக அநாயாசமாக எளிதாகப் பொருள் சொல்லிவிட்டார்.
இந்த நிகழ்ச்சியை ஐயரவர்கள் தம் ஆசிரியரைப் பற்றி எழுதியுள்ள வரலாற்று நூலில் காணலாம்.
இப்பாடலில் காணி, காணி என 18 முறை வருகிறது. இதனுடன் பாடல் வரிகளில் கடைசியாக கால் (1/4) என்றும், முக்கால்(3/4) மற்றும் நால் (இதை நான்கு கால் என்று கொள்ள வேண்டும்= 1/4+1/4+1/4+1/4=1) என்று கூட்டினால் (1/4)+(3/4)+(1/4+1/4+1/4+1/4)=2(இரண்டு) வருகிறது. ஆக மொத்தம் 18+2=20 இருபது காணி என்று வருகிறது . தமிழ்க் கணக்கில் காணி என்றால் 1/80 (எண்பதில் ஒரு பாகம்) எனப்படும். அதனால் இருபது காணி என்றால் 20*(1/80)=20/80=1/4 கால் என்று வருகிறது. எனவே "சிவபெருமானின் காலை காட்டும் கழுக்குன்றே" என்று மிக அற்புதமாக நமக்கு உணர்த்தியுள்ளார் புலவர்.
சிவபெருமானின் திருவடியைக் காண (காலைக் காண) வேண்டுமானால் கழுக்குன்றம் வாருங்கள் என்றழைக்கிறார் புலவர். சிவபெருமானின் திருப்பாதத்தை திருப்பெருந்துறையில் பெற்ற மாணிக்கவாசகர் அத்திருவடிகளை இங்கு (திருக்கழுக்குன்றத்தில்) வைத்து காணொணாத் திருக்கோலம் கண்டு மகிழ்ந்தார் என்பதை இந்த அழகிய பாடலில் இருந்து உணரலாம்.!!
No comments:
Post a Comment