Tuesday, July 23, 2019

அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பு சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே!

அன்பும்,சிவமும் வேறானவை என்று ஒருவர் சொன்னால்,அவர் ஒன்றும் அறியாதவர் ஆவார்.அன்புதான் சிவம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.அன்புதான் சிவனை அறியும் வழி என்பதை ஒருவர் அறிந்த பின் அன்பானவராய் இருப்பார்.சிவத்தன்மை அடைவார்


Friday, July 19, 2019

திரு அருட்பா - வாடிய பயிரை கண்டு வாடிய வள்ளலார்

சக மனிதன் துன்பப் படுவதை கண்டும் கூட கண்டும் காணமல் போகும் காலம் இது. 

மனிதன் அல்ல, ஐந்தறிவு கொண்ட விலங்கு கூட அல்ல, தண்ணீர் இல்லாமல் வாடிய பயிரை கண்டு உள்ளம் வாடினார் வள்ளலார்.

மற்றவர்கள் துன்பத்தை கண்டு வருத்தப் படுவது எல்லோருக்கும் எளிதான ஒன்று தான்.

அந்த துன்பத்தை போக்க ஏதாவது செய்வது தான் கடினம்.

மனிதனுக்கு வரும் பெரிய துன்பம் பசி துன்பம் தான். அந்த துன்பத்தை போக்க வல்லாளர் அணையாத அடுப்பை கொண்ட உணவு சத்திரத்தை நிறுவினார்.

வடலூரில் அந்த உணவு சாலை இன்றும் இயங்கி கொண்டு இருக்கிறது. 

அவர் மறைந்த பின்னும் அவர் நிறுவிய அந்த சத்திரம் மக்களின் பசிப் பிணியை நீக்கிக் கொண்டு இருக்கிறது.

அவருடைய மனித நேயத்திற்கு இந்த பாடல் ஒரு சாட்சி.....





வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர் என் நேர் உறக்கண்டுளந்துடித்தேன்
ஈடின்மானிகளாய் ஏழைகளாய் நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்

------------------------------------------------------------------------------------

வாடிய பயிரைக் = நீரில்லாமல், வெயிலில் வாடிய பயிரை

கண்டபோ தெல்லாம் வாடினேன் = கண்டபோதெல்லாம் வாடினேன். எப்பவோ ஒருமுறை அல்ல, ஒவ்வொருமுறை வாடிய பயிரை கண்டபோதும் வாடினேன்


பசியினால் இளைத்தே = பசியினால் இளைத்து, உடல் மெலிந்து


வீடுதோ றிரந்தும் = வீடு தோறும் இரந்தும் (பிச்சை பெற்றும்)

பசியறா தயர்ந்த = பசி அறாது அயர்ந்த = பசி விலகாமல் சோர்ந்த

வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன் = ஒன்றும் இல்லாதவர்களை கண்டு உள்ளம் பதைத்தேன்

நீடிய பிணியால்= நீண்ட நாள் நோயால்

வருந்துகின்றோர் = வருத்தப் படுகிறவர்

என் நேர் உறக்கண்டுளந் துடித்தேன் = என் முன்னால் வரும் போது அவர்களை பார்த்து உள்ளம் துடித்தேன்

ஈடின் = ஒப்பு இல்லாத

மானிகளாய் = மானம் உள்ளவர்கள் கஷ்டப் பட்டாலும் மற்றவர்களிடம் போய் உதவி கேட்க மாட்டார்கள்.

ஏழைகளாய் = அப்படிப் பட்ட ஈடின் மானிகள் ஏழைகளாய்

நெஞ் சிளைத்தவர் = நெஞ்சம் இளைத்தவர்களை 

தமைக்கண்டே= அப்படி பட்ட மக்களை கண்டு 

 இளைத்தேன் = நானும் இளைத்தேன்

Tuesday, July 16, 2019

கொஞ்சி  விளையாடும் தமிழ் என நான் எழுதி வருகிறேன்.என் தமிழ் பல கவிஞர்கள் , எழுத்தாளர்கள் படைப்பில் குழந்தையாய், குழந்தை பேசும் மழலையாய் நம் செவிகளுக்கும், மனதிற்கும் இன்பம் அளித்து இனிக்கும் தமிழாய் உள்ளது.

ஆனால், பாவேந்தர் பாரதிதாசனுக்கோ..அவரின் உயிராகவே இருக்கிறது.

அவரின் தமிழின் இனிமை கவிதை ஒன்றைப் பாருங்கள்..

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்

என் கிறார்

ஆமாம்...எனினும் என்கிறாரே,,,ஏன்? என ஒரு நிமிடம் சிந்தியுங்கள்..
உயிர் இல்லையேல் ஒருவருக்கு சுவைக்க இனிப்பு ஏது?
கனி, கரும்பு, தேன்,பாகு,பால்,இளநீர் என அனைத்தின் சுவையும் உயிர் இருந்தால்தானே அறிய முடியும்.அந்த உயிர் எனக்குத் தமிழ் என்றுள்ளார்.

Tuesday, July 2, 2019

திருமூலர் திருமந்திரப்பாடல்

பழந்தமிழர்கள் அணுவை பற்றி ஆராய்ந்துள்ளனர். ஒவ்வொரு புலவரும் அணுவைப்பற்றி பலவாராக எழுதி உள்ளனர். ஒவ்வொருவரையும் தத்துவ ஞானிகள், விஞ்ஞானிகள் என கூறுதல் பொருத்தமே. சிவனின் அடிப்படை தாத்பர்யமே அணு என்று சொல்கிறார்கள். அணுவை விளங்கிக்கொள்ள உருவாக்கிய வரைபடம் லிங்க உருவம் என்று சொல்லுவதும் மிகையில்லை.
தமிழில் அணுவை குறித்து பல பதங்கள் காணக்கிடைக்கிறது. இதிலிருந்தே அணுவை பகுத்து பெயரிட்டது விளங்கும். பல வார்தைகள் இருந்தாலும் மூன்று வார்த்தைகளை எடுத்துக்கொள்வோம் கோண், பரமாணு, இம்மி .
கோண் என்பது மிக நுண்ணிய அளவு. இதை விடச்சிறிய அளவு பரமாணு இதை விடச்சிறிய அளவு இம்மி.
இப்பிரபஞ்சம் முழுமையும் அணுக்களால் நிரம்பியது என்று அன்றே சொன்னார்கள். வெளிப்படையான குறியீடுகளையும் சமன்பாடுகளையும் வகுக்காமல் விட்டுவிட்டார்கள்.
திருமூலர் எழுதிய திருமந்திரப் பாடல்களிலிருந்து தமிழர்கள் எந்த அளவு அணு குறித்த ஞானம் உடையவர்கள் என்பதை விளங்கிக்கொள்ளலாம்.


“அணுவில் அணுவினை, ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுகவல் லார்கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே”
~ திருமந்திரம் (திருமூலர்)
பொருள்:
தவ யோகி தன் உயிரின் அணுவை அதில் மறைந்து இயங்கும் ஆதிப் பிரானின் அணுவை அணுக முயல்கிறான். தன் அக ஆராய்ச்சியில் உயிர் அணுவை தன் நுண் அறிவால் ஆயிரம் கூறு இட்டு துளைத்து ஆராய்ந்து ஆன்மாவில் சிவத்தின் தன்மையை அணுக வல்லமை கொள்கிறான். இங்ஙனம் ஆராய்ச்சி கொண்டவர்க்கு தன் ஆன்ம அணுவில் மூல அணுவோடு அணுகலாம்.
(இதன் சுருக்கமான பொருள் “நுண்மையான சீவனுக்குள்ளேயும், அதி நுண்மையான அணுவுக்குள்ளும் அணுவாக ஆண்டவன் விளங்குகிறான்”)

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...