Wednesday, February 28, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 48

திருவள்ளுவ நாயனார் என்பவரின் (திருக்குறள் வள்ளுவர் அல்ல) தனிப்பாடல்களில் ஒன்று-


எந்தவூரென்றீர் இருந்தவூர் நீர்கேளீர்
அந்தவூர்ச் செய்தி அறியீரோ –அந்தவூர்
முப்பாழும் பாழாய் முடிவிலொரு சூனியமாய்


அப்பாலும் பாழென்று அறி .
எந்த ஊர் என்றீர். நான் இருந்த ஊர் தாய் வயிற்று நீர். அந்த ஊரைப் பற்றிய செய்தி உங்களுக்குத் தெரியாதா? (எங்கும், என்றும், எதுவுமாக இருப்பவை மூன்று பாழ்-வெளிகள். அவை காலம், இடம், அறிவு என்பவை) இந்த மூன்று பாழ்-வெளியும் பாழாகி முடிவில் ஒரு சூனியமாய்ப் போய்விட்டது. அந்தப் பாழ்-வெளி மீண்டும் பாழாகி (பொருள், இடம், காலம்) என உரு எடுத்துள்ளது


இந்தப் பாடலை நான் பார்த்ததும்,"காட்டு ரோஜா: "என்ற திரைப்படத்தில் கண்ணதாசன் வரிகளில் வந்த கீழ்கண்ட பாடல் ஞாபகம் வந்தது
எவ்வளவு அர்த்தம் பொதிந்த பாடல்..



எந்த ஊர் என்றவனே
இருந்த ஊரைச் சொல்லவா?
அந்த ஊர் நீயும்கூட
அறிந்த ஊர் அல்லவா! (எந்த)

உடலூரில் வாழ்ந்திருந்தேன்
உறவூரில் மிதந்திருந்தேன்
கருவூரில் குடி புகுந்தேன்
மண்ணூரில் விழுந்து விட்டேன்!

கண்ணூரில் தவழ்ந்திருந்தேன்
கையூரில் வளர்ந்திருந்தேன்
காலூரில் நடந்து வந்தேன்
காளையூர் வந்துவிட்டேன்! (எந்த)

வேலூரைப் பார்த்து விட்டேன்
விழியூரில் கலந்து விட்டேன்
பாலூறும் பருவமென்னும்
பட்டினத்தில் குடிபுகுந்தேன்!

காதலூர் காட்டியவள்
காட்டூரில் விட்டுவிட்டாள்
கன்னியூர் மறந்தவுடன்
கடலூரில் விழுந்துவிட்டேன்!

பள்ளத்தூர் தன்னில் என்னை
பரிதவிக்க விட்டு விட்டு
மேட்டூரில் அந்த மங்கை
மேலேறி நின்று கொண்டாள்!

கீழுரில் வாழ்வதற்கும்
கிளிமொழியாள் இல்லையடா
மேலூரு போவதற்கும்
வேளை வரவில்லையடா! (எந்த)

தமிழின் விளையாட்டை ரசித்தீர்களா?

Tuesday, February 27, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 47

அத்தை மகள் மூட்டிய ஆசையைக் காய் காய் என்று ஒரு வெண்பாவில் பாடிக் காட்டிய காளமேகப் புலவர் வெண்பா.

பாடல்

கரிக்காய் பொரித்தாள்கன்னிக்காயைத் தீத்தாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப்பண்ணாள் – உருக்கமுள்ள
அப்பக்காய் நெய்துவட்டலாக்கினா ளத்தைமகள்
உப்புக்காண் சீசீ யுமி. (51)

கரிக்காய் பொரித்தாள் | காயைப் பொறித்தாள்
கன்னிக்காயைத் தீத்தாள் | காயைத் தீயிலிட்டு வாட்டினாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்  | காயைப் பச்சடி பண்ணினாள்
உருக்கமுள்ள அப்பக்காய் நெய் துவட்டலாக்கினாள் | காயை நெய்யிலிட்டுத் துவட்டினாள்
அத்தைமகள் | அவள் யாருமன்று, என் அத்தைமகள்
உப்புக்காண் சீ சீ யுமி | அத்தனையிலும் உப்பு. சீ சீ உமிழ்ந்துவிடு.

அகப்பொருள்
உடலுறவுப் பொருள்

கரிக்காய் பொரித்தாள் | கரித்துக் கொட்டி என்னை வறுத்தெடுத்தாள்
கன்னிக்காயைத் தீத்தாள் | கன்னிப் பருவத்தைக் கழித்துவிட்டுப் பூப்பு எய்தினாள்
பரிக்காயைப் பச்சடியாய்ப் பண்ணாள்  | அத்தைமகனாகிய நான் பரிவு கொண்டு அவளுக்குப் பூப்பு-மனை கட்டித் தந்தேன். அவள் அந்தப் பச்சைப் பந்தல் அடியில் இருந்தாள்.
உருக்கமுள்ள அப்பக்காய் நெய் துவட்டலாக்கினாள்| உருக்கமுள்ள அந்தப் பருவப்-பக்கத்தில் நெய்முழுக்கு ஆடினாள். பூப்பு நீராட்டுவிழா நடந்தது.
அத்தைமகள் | அவள் வேறு யாருமன்று. என் அத்தைமகள்.
உப்புக்காண் சீ சீ யுமி  | இந்த நிகழ்வுகள் எல்லாமே உடலில் உப்பு தோன்றுவதற்காக. அவளும் நானும் தழுவி எங்கள் உடம்பில் உப்பு தோன்றுவதற்காக. எங்கள் உணர்வு ஊறல்கள் சீய்த்துச் சீய்த்து ஒன்றில் ஒன்று உமிழ்ந்துகொள்வதற்காக.  

Monday, February 26, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 46

ஒட்டக்கூத்தனுக்கும், புகழேந்திக்கும் என்றுமே ஒத்துப்போகும் மனப்பான்மை இல்லை.ஒரு முறை புகழேந்தியை பழித்து சோழமன்னனிடம் ஒட்டக்கூத்தர் சொல்ல அதற்கு புகழேந்தி அளித்த பதில்..ஆகிய இரண்டையும் காணலாம்.

இப்படிப்பட்ட தருணத்திலும், புலவர்களிடம் தமிழ் எப்படி விளையாடுகிறது பாருங்கள்..ரசியுங்கள்

ஒட்டக்கூத்தன்
மானிற்குமோ விந்தவாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
கானிற்குமோ விவ்வெரியுந் தணன்முன் கனைகடலின்
மீனிற்குமோ விந்தவெங்கண் சுறாமுனம் வீசுபனி
தானிற்குமோ விக்கதிரவன் றோற்றத்திற் றார்மன்னனே. 
சோழ மன்னனே! வேங்கை முன்னர் மான் நிற்குமோ? எரியும் தீ முன்னர் காய்ந்து போயிருக்கும் காடு நிற்குமோ? கொடிய சுறா-மீனின் முன்னர் கடல் வாழ் மீன் நிற்குமோ? கதிரவன் முன் வீசும் பனி நிற்குமோ? - அப்படித்தான் என் முன் புகழேந்தி.
புகழேந்தி
மானவனா னந்தவாளரி வேங்கைமுன் வற்றிச்செத்த
கானவனா னவ்வெரியுந் தணன்முன் கணைகடலின்
மீனவனா னந்தவெங்கண் சறாமுனம் வீசுபனி
தானவனா னக்கதிரவன் றோற்ற நற்றார் மன்னனே.
மன்னா! அந்த வேங்கைமுன் மானவன் (மான்) நான். அந்த எரி முன் கானவன் (வேடன்) நான். அந்தச் சுறா முன் மீனவன் (மீனக்கொடி பறக்கும் நாட்டிலிருந்து வந்தவன்) நான். அந்தப் பனி முன் தானவன் (தானைத் தலைவன்) நான். தோன்றி எதிர்த்து நிற்பேன்.

Sunday, February 25, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்- 45

நாலடியார் பாடல் ஒன்று

வைகலும் வைகல் வரக்கண்டு மஃதுணரார்
வைகலும், வைகலை வைகும் என்று இன்புறுவர்-
வைகலும் வைசுற்றம் வாழ்நாள்மேல் வைகுதல்
வைகலை வைத்துணரா தார்

ஒவ்வொரு நாளும் ஒரு புது நாள் வருவதன் மூலம், தம் வாழ்நாள் ஒவ்வொன்றாகக் குறைந்து கொண்டே வருகிறது என்பதை எண்ணிப் பார்க்காமல், நாள்தோறும் தங்கள் வாழ்நாள் வளர்ந்து வருகிறது என்றெண்ணி மயங்கும் மூடர்கள், வருகிற ஒவ்வொரு நாளும் தங்கள் வாழ்வை அறுக்கவரும் வாள் என்றறிய மாட்டார்கள்

இப்பாடலில் வைகல் என்ற சொல் நாள் என்ற பெயரில் பல இடங்களில் வருவதால்
இது சொல் பொருள் பின்வருநிலை அணியைச் சேர்ந்ததாகும் 



Saturday, February 24, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 44

காளமேகம் சிவனை இகழ்வது போல் புகழ்ந்த பாடல்

.
“தீத்தான் உன் கண்ணிலே ; தீத்தான் உன் கையிலே ;
தீத்தானும் உந்தன் சிரிப்பிலே – தீத்தான் உன்
மெய் எல்லாம்! புள் இருக்கும் வேளூரா!
உன்னையித்தையலாள் எப்படிச் சேர்ந்தாள் ?
பொருள்.
——————-
நோய்களைத் தீர்க்கும் மிருத்திகையை
(மண்ணை) மருந்தாகத் தருபவர் வைத்தியநாத
ஸ்வாமி. வைத்தீஸ்வரன் கோயில் என்னும்
புள்ளிருக்கும் வேளூரில் உள்ள இந்தக்
கோயிலின் “சித்தாமிர்த தீர்த்தம்” மிகச் சிறப்பு
வாய்ந்தது.இந்தத் தலத்துக்கு வந்து சேர்ந்தான்
நையாண்டிக்குப் பெயர்போன காளமேகம்.
இங்கே எழுந்தருளியுள்ள பெருமானைப்
பார்த்ததும், அவனுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.
என்ன கேள்வி தெரியுமா ?“கண்ணிலே நெருப்பு (நெற்றிக்கண்);
கையிலே நெருப்பு (தாருகாவன முனிவர்கள்
ஏவியது) ;
சிரிப்பிலே நெருப்பு (திரிபுர சம்ஹாரத்தின்போது
வெளிப்பட்டது) ;
உடலும் நெருப்பு (அடிமுடி காணமுடியாத
அனல் பிழம்பாய், அண்ணாமலையில்
வெளிப்பட்டது).இப்படி நெருப்பு மயமாய் இருக்கும் உன்னோடு,
இந்தப் பெண் (தையலாள்) எப்படிச் சேர்ந்தாள் ?”
– இதுதான் காளமேகத்தின் கேள்வி.
“தையல்” என்பதற்கு பெண் என்றும் பொருள்.
அதே சமயம், வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள அம்பிகையின் பெயரும் தையல்நாயகிதான் !
##

Friday, February 23, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 43

இப்பாடல் சுந்தர கவிராயர் என்பவரின் தனிப்பாடல்


மரம் அது மரத்தில் ஏறி, மரம் அதைத் தோளில் வைத்து,
மரம் அது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி
மரம் அது வழியே சென்று, வளமனைக்கு ஏகும்போது
மரம் அது கண்ட மாதர் மரமுடன் மரம் எடுத்தார்

(இந்தப் பாடல் ஓர் அழகான வார்த்தை விளையாட்டு. இதில் ‘மரம்’ என்ற சொல் வருகிற ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு மரங்களின் பெயர்களைப் பொருத்திப் பொருள் கொள்ளவேண்டும்)
மரம் அது மரத்தில் ஏறி = அரசன் ஒருவன் மாவில் (குதிரையின்மீது) ஏறுகிறான்
மரம் அதைத் தோளில் வைத்து = வேலைத் தோளில் வைக்கிறான்
மரம் அது மரத்தைக் கண்டு = அரசன் ஒரு வேங்கைப் புலியைப் பார்க்கிறான்
மரத்தினால் மரத்தைக் குத்தி = வேலினால் வேங்கையைக் குத்துகிறான்
மரம் அது வழியே சென்று = அரசன் வந்த வழியிலேயே திரும்புகிறான்
வளமனைக்கு ஏகும்போது = வளங்கள் நிறைந்த தன்னுடைய மாளிகைக்குச் செல்கிறான்
மரம் அது கண்ட மாதர் = அரசனைச் சில பெண்கள் காண்கிறார்கள்
மரமுடன் மரம் எடுத்தார் = ஆலத்தி (ஆல் + அத்தி) எடுத்து வரவேற்றார்கள்
ஆக, ராஜா ஒருவன் வேட்டைக்குப் போய் வேங்கையைக் கொன்று திரும்புகிறான், பெண்கள் அவனை வரவேற்கிறார்கள், அவ்வளவுதான் விஷயம், இதைச் சொல்வதற்கு அரச மரம், மா மரம், வேல மரம், வேங்கை மரம், ஆல மரம், அத்தி மரம் என்று ஒரு காட்டையே பாட்டுக்குள் நுழைத்துவிட்டார் புலவர்!

தமிழ் விளையாடும் விளையாட்டை ரசித்தீர்களா?

Wednesday, February 21, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்- 42

கம்பன் கண்ட மருத நில வேளாளரைப் பாருங்கள்

‘’ தொழும் குலத்தில் பிறந்தான் ஏன்?
    சுடர் முடிமன் னவர் ஆகி
எழும் குலத்தில் பிறந்தால் ஏன்?
   இவர்க்குப்பின் வணிகர்எனும்
செழுங்குலத்தில் பிறந்தர் ஏன்?
  சிறப்புடையர் ஆனால்ஏன்?
உழும்குலத்தில் பிறந்தாரே
   உலகு உய்யப் பிறந்தாரே  …
….. 
. தொழுங்குலம், அந்தணர் குலம், எழும்குலம், மன்னர்குலம், செழுங்குலம், வணிகர் குலம், எந்த குலத்தில் பிறந்தாலும்.  உழும்  குலத்தில் பிறப்பதை  தான் உயர்வு என் கிறார்.  உழும் குலந்தான் உற்பத்தி செய்கிறது. தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் உற்பத்தியை, உணவை தருகிறனர். மற்ற குலத்திற்கும் உணவளிக்கும் உயர்ந்த குலம் என்று பதித்தார். .
உழும் குலமே ஆண்ட குலம் ஆளபோகும் குலம்
உழும் குலம் தான் தன் உயர்வால் மண்ணை ஆண்டது. சங்ககாலம் காட்டுகிறது.  ஏர் எழுபதால் ஏராளர் எழ வேண்டும். பார் ஆள வேண்டும். அது தான் தமிழ் உழவர் ஆட்சி !!!!!  

Tuesday, February 20, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 41

எல்லாம் அறிந்தவர் யாருமில்லை.

மெத்தப்படித்தவனுக்குத் தெரியாதது ஒன்று படிக்காத ஒருவனுக்கு தெரிந்திருக்கக் கூடும்,

அதனால்தான் கற்றது கைமண் அளவு என்றார்.

சுட்டப்பழம்..சுடாத பழம் என்பதை ஔவைக்கு சொல்லிக் கொடுத்தவன் குமரன்

அப்படிப்பட்ட ஔவையிடம் ஒருசமயம், அரசன்


 “ கம்பரைப் போல பெரிய காப்பியம் பாடும் திறன் யாருக்கும் இல்லை "என்று சொல்லியபோது ஒளவையார் பாடியது.

வான்குருவி யின்கூடு வல்லரக்குத் தொல்கரையான்
தேன்சிலம்பி யாவர்க்குஞ் செய்யரிதால்; -- யாம்பெரிதும்
வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம்கான்
எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.

தூக்கணங் குருவியின் கூடும், வன்மையான அரக்கும், கரையான் புற்றும், தேன் கூடும், சிலந்தி வலையும் எல்லோராலும் செய்யக்கூடியவை அல்ல, ஆதலால் யாம் மிக்க திறமையுள்ளவர் என்று ஒருவர் தம் பெருமையைக் கூறல் கூடாது. ஏனெனில் எல்லோரும் ஒவ்வொன்று எளிது.

எல்லோரும் ஒவ்வொன்று எளிது என்பதை மிகவும் தெளிவான உதாரணங்கள் மூலம் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதுபோன்ற பாடல்கள் முலம் சங்ககால தமிழ் புலவர்களின் திறமையையும் தமிழின் சிறப்பையும் நம்மால் உணர முடிகிறது.

கொஞ்சி விளையாடும் தமிழ் - 40

கொஞ்சி விளையாடும் தமிழ்
---------------------------------------------------

இந்தப் பாடலில் தமிழின் விளையாட்டைப் பாருங்கள்.

காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே
இந்தப்பாடலின் அர்த்தம் என்ன?
தமிழ்த்தாத்தா உவேசாமிநாதய்யர் தம்முடைய ஆசிரியராகிய மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடம் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு விடுகவியை யாரோ சொல்லியிருக்கிறார்கள். அந்த விடுகவிக்கு யாராலும் ரொம்ப காலமாகப் விளக்கம் சொல்லமுடியவில்லை. அந்தவாறே அது பலகாலமாக உலவிக்கொண்டு வந்திருக்கிறது. எத்தனை நூற்றாண்டுகள் ஆயினவோ தெரியவில்லை.
இந்தப் பாடலை பிள்ளையவர்களிடம் சொல்லிப் பொருள் கேட்டபோது மிக விரைவாக அநாயாசமாக எளிதாகப் பொருள் சொல்லிவிட்டார்.
இந்த நிகழ்ச்சியை ஐயரவர்கள் தம் ஆசிரியரைப் பற்றி எழுதியுள்ள வரலாற்று நூலில் காணலாம்.
அந்த நூலில் பிள்ளையவர்கள் கூறிய பதில் மட்டும்தான் இருக்கிறது.
அது எப்படி என்று விளக்கப்படவில்லை.
அக்காலத்தில் காணி, மாகாணி போன்ற பின்னங்கள் வழக்கில் இருந்தன. ஆகையால் அந்தக் கணக்கெல்லாம் அவரவர் ஊகித்து அறிந்துகொள்ளமுடிந்திருக்கும். ஆகவே ஐயரவர்கள்
அந்தக் கணக்கை விளக்காமல் விட்டிருப்பார் போலும்.
பிள்ளையவர்கள் கூறிய பொருளை வைத்து நானே கணக்குப் போட்டு கீழே விளக்கியிருக்கிறேன்........
ஒன்றில் எண்பதில் ஒரு பங்கு 1/80 'காணி' எனப்படும்.
மேற்கூறிய பாடலில் இருபது முறை 'காணி' வருகிறது.
எப்படி என்று பார்ப்போம்......
ஒவ்வொரு அடியாகக் கணக்கிடுவோம்......
1/80 + 1/80 + 1/80 + 1/80 + 1/80 + (கால்காணி) 1/320 +
1/80 + 1/80 + 1/80 + 1/80 + (முக்கால்காணி) 3/320 +
1/80 + 1/80 + 1/80 + 1/80 + (நாற்காணி) 1/80 + 1/80 + 1/80 + 1/80 +
1/80 + 1/80
20 X 1/80 = 1/4
கால்!
கால் காட்டும் கழுக்குன்றமே.
மோட்ச கதியை அடைவதற்குத் திருக்கழுக்குன்றம் தன்னுடைய காலை அடைக்கலமாகக் காட்டும்.

Monday, February 19, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 39

ஏலாதியில் ஒரு பாடல்

பொய்யுரையான் வையான் புறங்கூறான் யாவரையும்
மெய்யுரையா னுள்ளனவும் விட்டுரையான் - எய்யுரையான்
கூந்தன்மயி லன்னாய்! குழீஇயவான் விண்ணோர்க்கு
வேந்தனா மிவ்வுலகம் விட்டு.

(இ-ள்.) கூந்தல் மயில் அன்னாய் - மயிற்றோகையைப் போன்ற கூந்தலையுடைய பெண்ணே!, 
பொய் உரையான் - பொய் சொல்லான்; 
வையான் - எவரையும் இகழான்; 
யாவரையும்-ஒருவரையும், 
புறங்கூறான் - புறம்பாக இழித்துப் பேசான்; 
மெய் உரையான் - பிறர் துன்பத்தை நீக்குதற்காக நடந்த உண்மையைச் சொல்லான், 
உள்ளனவும் - தன்மாட்டு உள்ள பொருள்களையும், 
விட்டு உரையான் - வெளிப்படுத்துச் சொல்லான், 
எய் உரையான் - நண்பன்மாட்டுந் தன் வறுமையை வெளிப்படுத்தானாகிய இவன், 
இவ்வுலகம் விட்டு - இம்மண்ணுலகத்தை விட்டு நீங்கி, 
வான் குழீஇய - மேலுவலகத்திற் கூடியுள்ள, 
விண்ணோர்க்கு - தேவர்களுக்கு, 
வேந்தன் ஆம் - தலைவனாவான்.

Saturday, February 17, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் =38

சிறுபஞ்சமூலம் காரியாசான் இயற்றியது

மயிர்வனப்பும், கண் கவரும் மார்பின் வனப்பும்
உகிர் வனப்பும், காதின் வனப்பும், செயிர் தீர்ந்த
பல்லின் வனப்பும்,வனப்பு அல்ல: நூற்கு இயைந்த
சொல்லின் வனப்பே வனப்பு

தலை முடி,மார்பு, நகம்,செவி,பல் இவைதரும் அழகு ஒருவருக்கு அழகல்ல.நல்ல நூல்களைக் கற்று சொல்வன்மையால் வரும் அழகே சிறந்த அழகாகும்.

சாதாரண சொற்களால், எவ்வளவு பெரிய அர்த்தத்தைத் தர முடிகிறது.

என் தமிழுக்கு ஈடு இணை உண்டோ?

Friday, February 16, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 37

அருணகிரிநாதரின் சரித்திரத்தில் ஒரு முக்கிய சம்பவம் உண்டு. வில்லிப்புத்தூரார் என்னும் ஸ்ரீவைஷ்ணவர் ஒருவர் தமிழ் வாதுக்கு புலவர்களை அழைக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.

வாதில் தோற்றவர்களின் காதை ஒட்ட அறுத்து, விரட்டி அடித்துவிடுவார். இதனால் பல புலவர்கள் அந்த வட்டாரத்திற்குள்ளும் நுழைய அஞ்சியிருந்தனர். அதை அறிந்த அருணகிரிநாதர் அந்த வழக்கத்தை உடனடியாக நிறுத்தி, புலவர்களைக் காப்பாற்றவேண்டும் என்ற நோக்கம் கொண்டார். ஆகவே வில்லிப்புத்தூராரை நாடிச் சென்றார். அவரையும் வில்லிப்புத்தூரார் வாதுக்கழைத்தார்.

வில்லிப்புத்தூரார் தம்முடைய கையில் நீளமான துரட்டியைப் பிடித்திருப்பார். அதன் ஒரு நுனியில் காதை அறுக்கக்கூடிய பதமான வளைந்த கத்தி இருக்கும். அதை எதிராளியின் காதின் மீது வைத்துக்கொண்டு கேள்விகளைக் கேட்பார். பாடல்களைச் சொல்லச் சொல்வார். ஏதும் வழு இருந்தால் உடனடியாக எட்டினமட்டும் காதை அறுத்துவிடுவார்.

அருணகிரியோ ஒரு புது கண்டிஷனைப் போட்டுவிட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். அருணகிரி ஓர் அந்தாதியைப் பாடுவார். அதில் ஒரே ஒரு பாடலுக்கு மட்டும்வில்லி அர்த்தம் சொல்லிவிட்டால் போதும். அவ்வாறு சொல்லிவிட்டால் வில்லிப்புத்தூரார் வென்றவர் ஆவார். வென்றவர் எட்டினமட்டும் தோற்றவர் காதை அறுத்துவிடலாம். அப்படி வில்லி பொருள் சொல்லவில்லையென்றால் வில்லியின் காதை அருணகிரி அறுக்கலாம். வில்லியும் ஒத்துக்கொண்டார்.

வாதத்தை வளர்த்துச் செல்லவிரும்பாத அருணகிரி, ஒரு பாடலைத் தாமே சொல்லி, அதன் பொருளைக் கேட்டார். வில்லிப்புத்தூரார் விதிர்த்துப்போய் அமர்ந்துவிட்டார். ஏனெனில் அந்தப் பாடல் தலையும் புரியவில்லை; காலும் புரியவில்லை.
அது ஒரு "தகரவர்க்க"ப் பாடல். முற்றிலும் "த" என்னும் எழுத்தின் வரிசையிலேயே இந்தப் பாடல் முழுமையும் அமைந்திருக்கும். சமஸ்கிருதத்திலும் தெலுங்கிலும் இவ்வகைப்பாடல்கள் உண்டு. "ஏகாக்ஷரப் பாடல்" என்று சொல்வார்கள். தமிழில் ககரவர்க்கம், தகரவர்க்கம் ஆகியவற்றில் பாடல்கள் உண்டு. காளமேகப்புலவர், அருணகிரிநாதர் முதலியோர் பாடியிருக்கின்றனர். வில்லிப்புத்தூரார் தம்முடைய தோல்வியை ஒப்புக்கொண்டு, தம் காதை அறுத்துக்கொள்ளுமாறு அருணகிரியிடம் கேட்டுக்கொண்டார். அருணகிரியோ அது தம்முடைய நோக்கமல்ல என்றும் புலவர்களை இவ்வாறு அவமதித்து அவர்களுக்குக் கொடுமை செய்வதை நிறுத்தச் செய்யவேண்டும் என்பதே விருப்பம் என்றும் சொல்லிவிட்டார். வில்லிப்புத்தூரார் அருணகிரியிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு தாம் இனி தமிழை வளர்க்கப் பாடுபடப் போவதாக வாக்குறுதி கொடுத்தார். பின்னாட்களில் அவர் தமிழில் மகாபாரதத்தைப் பாடினார். அந்த நூல் அவருடைய பெயராலேயே 'வில்லி பாரதம்' என்று வழங்குகிறது.

பாடலைப் பார்ப்போம்:
"திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"
இதன் பொருளை திருமுருக கிருபாநந்தவாரியார் சுவாமிகள் இவ்வாறு கொடுக்கிறார்.

திதத்தத் தத்தித்த - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை,
திதி - திருநடனத்தால் காக்கின்ற
தாதை - பரமசிவனும்
தாத - பிரமனும்
துத்தி - படப்பொறியினையுடைய
தத்தி - பாம்பினுடைய
தா - இடத்தையும்
தித - நிலைபெற்று
தத்து - ததும்புகின்ற
அத்தி - சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி - தயிரானது
தித்தித்ததே - தித்திக்கின்றதென்று
து - உண்ட கண்ணனும்
துதித்து - துதி செய்து வணங்குகின்ற
இதத்து - பேரின்ப சொரூபியான
ஆதி - முதல்வனே!
தத்தத்து - தந்தத்தையுடைய
அத்தி - அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை - கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத - தொண்டனே!
தீதே - தீமையே
துதை - நெருங்கிய
தாது - சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து - மரணத்தோடும்
உதி - ஜனனத்தோடும்
தத்தும் - பல தத்துக்களோடும்
அத்து - இசைவுற்றதுமான
அத்தி - எலும்புகளை மூடிய
தித்தி - பையாகிய இவ்வுடல்
தீ - அக்கினியினால்
தீ - தகிக்கப்படுகின்ற
திதி - அந்நாளிலே
துதி - உன்னைத் துதிக்கும்
தீ - புத்தி
தொத்தது - உனக்கே அடிமையாகவேண்டும்

இப்பாடல் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல். இதில் "திதத்தத்தத்" என்பது நான்கு அடிகளிலும் திருப்பித்திருப்பி வருகிறது. இதனை "மடக்கு" அல்லது "யமகம்" என்று சொல்வார்கள்.முதற்பாடலின் கடைச்சொல்லும் அடுத்தபாடலின் முதற்சொல்லும் ஒன்றாக இருக்கும். ஆகவே அக்காப்பிய வகையை "அந்தாதி" என்று சொல்வார்கள். கந்தர் அந்தாதியில் மேலும் சில பாடல்கள் - தெரிந்துகொள்ளவேண்டியவை இருக்கின்றன. உலக மொழிகளிலே தமிழில் இருக்கும் அத்தனை விந்தைகள்

Thursday, February 15, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ்- 36

திருப்புகழில் அருணகிரிநாதர் பாடிய இப்பாடலில், தமிழின் விளையாட்டைப் பாருங்கள்
முத்தைத் தருபத்தித் திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக் குருபர எனஓதும்
முக்கட்பரமற்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்திருவரும்
முப்பத்துமூவர்க்கத் தமரரும் அடிபேண
பத்துத்தலை தத்தக் கணைதொடு
ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
பட்டப்பகல் வட்டத் திகிரியில் இரவாகப்
பத்தற் கிரதத்தைக் கடவிய
பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ஒருநாளே
தித்தித் தெய ஒத்தப் பரிபுர
நிர்த்தப்பதம் வைத்துப்பயிரவி
திக்கொக்கு நடிக்கக் கழுகொடு கழுதாடத்
திக்குப் பரி அட்டப் பயிரவர்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு
சித்ரப்பவுரிக்குத் ரிகட கெனவோதக்
கொத்துப்பறை கொட்டக் களமிசை
குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடியென முதுகூகை
கொட்புற்றெழ நட்பற் றவுணரை
வெட்டிப்பலி இட்டுக் குலகிரி
குத்துப்பட ஒத்துப் பொரவல பெருமாளே!
பத உரை
முத்தை = முத்துப் போன்ற முத்திச் செல்வத்தை
தரு = அளிக்கும்
பத்தித் திரு நகை = வரிசையாய் விளங்கும் பற்களை உடைய
அத்திக்கு = யானையால் வளர்க்கப்பட்ட தேவசேனைக்கு
இறை = இறைவனே
சத்தி = சத்தி வேல் (ஏந்திய)
சரவண = சரவணபவனே
முத்திக்கு = வீட்டுப் பேற்றுக்கு
ஒரு வித்து = ஒரு வித்தே
குருபர = குரு மூர்த்தியே
என ஓதும் = என்று ஓதுகின்ற
முக்கண் பரமற்கு = மூன்று கண்களை உடைய சிவபெருமானுக்கு
சுருதியின் = வேதத்தின்
முற்பட்டது = முற்பட்டு நிற்கும் பிரணவத்தை
கற்பித்து = கற்பித்து
இருவரும் = பிரமன், திருமால் ஆகிய இருவரும்
முப்பத்து மூ வர்க்கத்து = முப்பது மூன்று வகையான
அமரரும்- தேவர்களும்
அடி பேண = (உனது)திருவடியை விரும்ப (அவுணருடன் போர் செய்த பெருமாளே)
பத்துத் தலை தத்த = (இராவணனுடைய) பத்து தலைகளும் சிதறும்படி
கணை தொடு = அம்பைச் செலுத்தியும்
ஒற்றைக் கிரி மத்தை = ஒப்பற்ற மந்தரம் என்னும் மலையை மத்தாக நட்டு
பொருது = (கடலைக்) கடைந்தும்
ஒரு பட்டப்பகல் = ஒரு பட்டப் பகலை
வட்ட = வட்ட வடிவமாக உள்ள
திகிரியில் = சக்கரத்தினால்
இரவாக = இரவாகச் செய்தும்
பத்தற்கு இரதத்தைக் கடவிய = பத்தனாகிய அருச்சுனனுடைய தேரைப் பாகனாகஇருந்த நடத்திய
பச்சைப் புயல் = பச்சை மேகம் போல் நிறமுடைய திருமால்
மெச்சத் தகு பொருள் = மெச்சத் தகுந்த பொருளே
பட்சத்தொடு = (என் மீது) அன்பு வைத்து
ரட்சித்து அருள்வதும் = (என்னைக்) காத்தருளும்
ஒரு நாளே = ஒரு நல்ல நாளும் உண்டாகுமா?
தித்தித்தெய ஒத்து = தித்தித்தெய என்னும் தாளத்துக்கு ஒத்த வகையில்
பரிபுரம் = சிலம்பு (அணிந்த)
நிர்த்தப் பதம் வைத்து = நடனப் பதத்தை வைத்து
பயிரவி = காளி
திக்கு = திக்குகளில்
ஒட்க நடிக்க = சுழன்று நடிக்கவும்
கழுகொடு = கழுகுகளுடன்
கழுது = பேய்கள்
ஆட = ஆடவும்
திக்குப் பரி = திக்குகளைக் காக்கும்
அட்டப் பயிரவர் = எட்டு பயிரவர்கள்
தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு = தொக்குத் தொகு தொக்குத் தொகுதொகு என வரும்.
சித்ர = அழகிய
பவுரிக்கு = மண்டலக் கூத்தை
த்ரிகடக என ஓத = த்ரிகடக என்று ஓதவும்
கொத்துப் பறை = கூட்டமான பறைகள்
கொட்ட = முழங்கவும்
களம் மிசை = போர்க் களத்தில்
குக்குக் குகு குக்குக் குகுகுகு- குக்குக் குகு குக்குக் குகுகுகு
குத்திப் புதை புக்குப் பிடி= இவ்வாறு ஒலி செய்து
முது கூகை = கிழக் கோட்டான்கள்
கொட்புற்று எழ = வட்டம் இட்டு எழவும்
நட்பு அற்ற அவுணரை = பகைவர்களாகிய அசுரர்களை
வெட்டிப் பலி இட்டு = வெட்டிப் பலி இட்டு
குலகிரி = குலகிரியாகிய கிரௌஞ்ச மலை
குத்துப்பட ஒத்து = குத்துப்படத் தாக்கி
பொர வ(ல்)ல = சண்டை செய்ய வல்ல
பெருமாளே = பெருமாளே

Wednesday, February 14, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 35

நந்தி கலம்பகத்தில் வரும்  பாடல்....
காதலனை பிரிந்து தனித்து இருக்கிறாள் காதலி.
தூக்கம் வரவில்லை. மொட்டை மாடியில் உலாத்திக் கொண்டிருக்கிறாள்.
நிலவைப் பார்க்கிறாள். அது கொதிக்கிறது.
இந்த நிலவு நம்மை மட்டும் தான் சுடுகிறதா இல்லை எல்லாரையும் சுடுகிறதா என்று யோசிக்கிறாள்...

ஊரைச் சுடுமோ உலகம் தனைச்சுடுமோ
யாரைச் சுடுமோ அறிகிலேன் -நேரே
பொருப்புவட்ட மானமுலைப் பூவையரே இந்த
நெருப்புவட்ட மான நிலா.

ஊரைச் சுடுமோ = இந்த ஊர் எல்லாம் சுடுமோ (என்றால் இந்த ஊரில் உள்ள எல்லோரையும் என்று பொருள்)

உலகம் தனைச்சுடுமோ = இந்த ஊர் மட்டும் அல்ல, உலகில் உள்ள எல்லோரையும் சுடுமோ?

யாரைச் சுடுமோ அறிகிலேன் = யார் யாரை எல்லாம் சுடுமோ, தெரியவில்லை

நேரே = நேரில் உள்ள இந்த நிலா

பொருப்பு = மலை முகடு, மலைத் தொடர்ச்சி போன்ற

வட்ட மானமுலைப் = அழகிய மார்பகங்களுடன்

பூவையரே = பூவை சூடும் பெண்களே

இந்த நெருப்புவட்ட மான நிலா. = இந்த நெருப்பு வட்டமான நிலா

(தமிழை மட்டும் ரசியுங்கள்)


Monday, February 12, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 34



ஔவை ஒரு சமயம் குலோத்துங்கன் அரசவைக்கு வருகை தந்தபொழுது ,ஆணாதிக்கம் மிக்க அந்த காலத்தில், கம்பர் அவரைப் பார்த்து ஔவையாருக்கும் ஆரைக்கீரைக்கும் சிலேடையாக தரக்குறைவாக(டீ என) விமர்சிக்க,

“ஒரு காலடீ, நாலிலைப் பந்தலடீ”

என்று கூற ஔவையார் கோபங்கொண்டு ஔவை..

எட்டேகால் லட்சணமே எமனேறும் பரியே

மட்டிற் பெரியம்மை வாகனமே முட்டமேற்

கூரையில்லா விடே குலராமன் தூதுவனே

ஆரையடா சொன்னாயது

என்று பதில் வந்தது ஔவையிடமிருந்து.

எட்டு (8) என்ற எண்ணுக்குத் தமிழில் “அ”, கால் (1/4) என்ற எண்ணுக்கு “வ”, அதனால் எட்டேகால் லட்சணமே என்றால் “அவலட்சணமே” என்றாகிறது. எமன்ஏறும் பரி என்றால் எருமை.பெரியம்மை என்றால் மஹாலக்ஷ்மியின் அக்காளான மூதேவி. கூரையில்லா வீடென்றால் குட்டிச்சுவர். குலராமன் தூதுவன் அனுமன் ஒரு குரங்கு. கம்பர் ராமாயணத்தை எழுதியதால் அவர் ஒரு வகையில் ரராமனின் தூதுவனாகிறார். நீ சொன்னது ஆரைக்கீரை எனும் பொருள்பட அடீ என்று சொன்னதற்கு பதிலுரையாக “அடா”வைச் சேர்த்து ஆரையடா என்றார்.

Sunday, February 11, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 33


பழ்ந்தமிழ் பாடல்களில் பலவகையான சித்துவிளையாட்டுக்களை புரிந்திருக்கிறார்கள் நம் புலவர்கள். உலகில் உள்ள மொழிகளில் வேறெந்த மொழியிலும் இந்த அளவுக்குச் சித்து விளையாடமுடியுமா என்பது சந்தேகமே.
தமிழில் மேல்வாய் இலக்கம் கீழ்வாய் இலக்கம் என்று எண்களின் வரிசையில் வரும். இவை பின்னங்கள் எனப்படும் Fractions சம்பந்தப்பட்டவை. கால், அரை, முக்கால் போன்றவை.
இவற்றை வைத்துப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். பார்க்கும்போது ஏதோ அர்த்தமில்லாமல் பின்னங்களை அங்கேயும் இங்கேயுமாகப் போட்டு எதையோ யாப்பு அமைத்துப் பாடல்களைப் போல் செய்திருக்கிறார்கள் என்று தோன்றும். ஆனால் அவற்றை உடைத்துப்பார்க்கும்போது அவற்றின் உள்ளர்த்தம் புரியும்.

.
முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது

இது காளமேகப் புலவரின் பாடல்.

முக்காலுக் கேகாமுன் = முக்காலுக்கு ஏகா முன் = பிறவியில் தோன்றிய
இரண்டு கால்கள் வலுவிழந்து, இடுப்பும் பலமற்று, முதுகும் கூனிப்போய்
இரண்டுகால்களுக்குத் துணையாக மூன்றாவது காலாகக் கோல் ஒன்றை
ஊன்றும்வண்ணம் முதுமை ஏற்படுவதற்குமுன்னர்

முன்னரையில் வீழாமுன் = அதற்கு முன் நரை ஏற்படுமுன்பாக

அக்காலரைக்கால்கண்டஞ்சாமுன்= அந்தக் காலர்களாகிய எமதூதுவரைக்கண்டு அஞ்சி கால்கள் நடுநடுங்குமுன்பாக

விக்கி இருமாமுன் = உயிர் பிரியுமுன்னர் விக்கிக்கொண்டு இருமல் ஏற்படுமுன்னர்

மாகாணிக் கேகாமுன்= சுடுகாட்டுக்கு ஏகாமுன்

கச்சி = காஞ்சிபுரத்தில் உள்ள

ஒரு மாவின் = தல விருட்சமாகிய ஒரு மாமரத்தின்

கீழரை = கீழ் இருக்ககூடியவரை

இன்று ஓது = இன்றைக்கே துதி செய்

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...