Sunday, February 11, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 33


பழ்ந்தமிழ் பாடல்களில் பலவகையான சித்துவிளையாட்டுக்களை புரிந்திருக்கிறார்கள் நம் புலவர்கள். உலகில் உள்ள மொழிகளில் வேறெந்த மொழியிலும் இந்த அளவுக்குச் சித்து விளையாடமுடியுமா என்பது சந்தேகமே.
தமிழில் மேல்வாய் இலக்கம் கீழ்வாய் இலக்கம் என்று எண்களின் வரிசையில் வரும். இவை பின்னங்கள் எனப்படும் Fractions சம்பந்தப்பட்டவை. கால், அரை, முக்கால் போன்றவை.
இவற்றை வைத்துப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். பார்க்கும்போது ஏதோ அர்த்தமில்லாமல் பின்னங்களை அங்கேயும் இங்கேயுமாகப் போட்டு எதையோ யாப்பு அமைத்துப் பாடல்களைப் போல் செய்திருக்கிறார்கள் என்று தோன்றும். ஆனால் அவற்றை உடைத்துப்பார்க்கும்போது அவற்றின் உள்ளர்த்தம் புரியும்.

.
முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்
அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி
இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி
ஒருமாவின் கீழரையின் றோது

இது காளமேகப் புலவரின் பாடல்.

முக்காலுக் கேகாமுன் = முக்காலுக்கு ஏகா முன் = பிறவியில் தோன்றிய
இரண்டு கால்கள் வலுவிழந்து, இடுப்பும் பலமற்று, முதுகும் கூனிப்போய்
இரண்டுகால்களுக்குத் துணையாக மூன்றாவது காலாகக் கோல் ஒன்றை
ஊன்றும்வண்ணம் முதுமை ஏற்படுவதற்குமுன்னர்

முன்னரையில் வீழாமுன் = அதற்கு முன் நரை ஏற்படுமுன்பாக

அக்காலரைக்கால்கண்டஞ்சாமுன்= அந்தக் காலர்களாகிய எமதூதுவரைக்கண்டு அஞ்சி கால்கள் நடுநடுங்குமுன்பாக

விக்கி இருமாமுன் = உயிர் பிரியுமுன்னர் விக்கிக்கொண்டு இருமல் ஏற்படுமுன்னர்

மாகாணிக் கேகாமுன்= சுடுகாட்டுக்கு ஏகாமுன்

கச்சி = காஞ்சிபுரத்தில் உள்ள

ஒரு மாவின் = தல விருட்சமாகிய ஒரு மாமரத்தின்

கீழரை = கீழ் இருக்ககூடியவரை

இன்று ஓது = இன்றைக்கே துதி செய்

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...