Monday, January 29, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 25


நாய்க்கால் சிறுவிரல்போல் நன்கணியா ராயினும்
ஈக்கால் துணையும் உதவாதார் நட்பென்னாம்?
சேய்த்தானும் சென்று கொளல்வேண்டும், செய்விளைக்கும்
வாய்க்கால் அனையார் தொடர்பு.

நாயின் காலில் இருக்கும் சிறிய விரல்களைப் போல மிகவும் நெருக்கம் உள்ளவராக இருந்தாலும், ஈயின் காலளவாயினும் உதவி செய்யாதவர் நட்பினால் என்ன பயன் உண்டாகும்? ஒரு பயனும் உண்டாகாது. ஆதலால், வயலை விளையும்படி செய்கின்ற வாய்க்காலைப் போன்றவா¢ன் நட்பினை, தூரத்தில் இருப்பதாயினும் போய்க் கொள்ளல் வேண்டும். (வயலால் தனக்கு ஒரு பயனும் இல்லையாயினும் தூரத்து நீரைக் கொணர்ந்து வயலை விளைவிக்கும் வாய்க்கால் போலும் பண்புடையாரது நட்பினை நாடிப் பெற வேண்டும் என்பது கருத்து). 

நாலடியார்...நட்பாராய்தல் அதிகாரம்


கொஞ்சி விளையாடும் தமிழ் - 23

நாட்டுப்பாடலில் விளையாடும் தமிழ்

மழைக்காகப் பூசை செய்யும் வழக்கமும் தமிழ் நாட்டில் எல்லாப் பகுதிகளிலும் இருந்து வந்தது. சில வேளைகளில் பல நாட்கள் பூசை செய்தும் மழை பெய்யாது போய் விடும். அப்பொழுது மன வேதனையோடு மக்கள் நாராயணனை நோக்கிக் கதறுவார்கள். நாராயணன் என்ற சொல்லுக்கு நீர் என்பது பொருள். அவர்கள் கண்ணீரைக் கண்டு நாராயணன் இளகி மழையைப் பொழிவான் என்பது மக்களது நம்பிக்கை. 
ஒருநாள் பூசை செஞ்சேன்
நாராயணா, ஒரு
ஒளவு மழை பெய்யலியே
நாராயணா !
ஒளவு பேயாமே நாராயணா
மொளைச்ச
ஒருபயிரும் காஞ்சு போச்சே
நாராயணா !
மூணு நாளாப் பூசை செஞ்சேன்
நாராயணா ! ஒரு
முத்து மழை பேயலியே
நாராயணா
முத்து செடி காஞ்சு போச்சே
நாராயணா,
அஞ்சு நாளாப் பூசை செஞ்சேன்
நாராயணா ஒரு
ஆடி மழை பேயலியே
நாராயணா !
ஆடி மழை பேயாமல்
நாராயணா !
ஆரியமெல்லாம் காஞ்சு போச்சே
நாராயணா !
வட்டார வழக்கு: ஒளவு-உழவு ; காஞ்சு - காய்ந்து ; முத்து செடி - அழகான செடி ; ஆரிய - நாடு.

Sunday, January 28, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 22


இந்தப் பாடலை பாருங்கள்..
:
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுங்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணிமுக்காற்
காணியுங் காணியுங் காணியுங் காணியுங் காணியுநாற்
காணியுங் காணியுங் காணியுங் காட்டுங் கழுக்குன்றமே
இந்தப்பாடலின் அர்த்தம் என்ன?

தமிழ்த்தாத்தா உவேசாமிநாதய்யர் தம்முடைய ஆசிரியராகிய மகாவித்வான் திரிசிரபுரம் மீனாட்சிசுந்தரம்பிள்ளையிடம் படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு விடுகவியை யாரோ சொல்லியிருக்கிறார்கள். அந்த விடுகவிக்கு யாராலும் ரொம்ப காலமாகப் விளக்கம் சொல்லமுடியவில்லை.

இந்தப் பாடலை பிள்ளையவர்களிடம் சொல்லிப் பொருள் கேட்டபோது மிக விரைவாக அநாயாசமாக எளிதாகப் பொருள் சொல்லிவிட்டார்.
இந்த நிகழ்ச்சியை ஐயரவர்கள் தம் ஆசிரியரைப் பற்றி எழுதியுள்ள வரலாற்று நூலில் காணலாம்.

இப்பாடலில் காணி, காணி என 18 முறை வருகிறது. இதனுடன் பாடல் வரிகளில் கடைசியாக கால் (1/4) என்றும், முக்கால்(3/4) மற்றும் நால் (இதை நான்கு கால் என்று கொள்ள வேண்டும்= 1/4+1/4+1/4+1/4=1) என்று கூட்டினால் (1/4)+(3/4)+(1/4+1/4+1/4+1/4)=2(இரண்டு) வருகிறது. ஆக மொத்தம் 18+2=20 இருபது காணி என்று வருகிறது . தமிழ்க் கணக்கில் காணி என்றால் 1/80 (எண்பதில் ஒரு பாகம்) எனப்படும். அதனால் இருபது காணி என்றால் 20*(1/80)=20/80=1/4 கால் என்று வருகிறது. எனவே "சிவபெருமானின் காலை காட்டும் கழுக்குன்றே" என்று மிக அற்புதமாக நமக்கு உணர்த்தியுள்ளார் புலவர்.
சிவபெருமானின் திருவடியைக் காண (காலைக் காண) வேண்டுமானால் கழுக்குன்றம் வாருங்கள் என்றழைக்கிறார் புலவர். சிவபெருமானின் திருப்பாதத்தை திருப்பெருந்துறையில் பெற்ற மாணிக்கவாசகர் அத்திருவடிகளை இங்கு (திருக்கழுக்குன்றத்தில்) வைத்து காணொணாத் திருக்கோலம் கண்டு மகிழ்ந்தார் என்பதை இந்த அழகிய பாடலில் இருந்து உணரலாம்.!! 

Saturday, January 27, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 21



பழந்தமிழ்ப்பாடல்களில் பலவகையான சித்துவிளையாட்டுக்களை புரிந்திருக்கிறார்கள் நம் புலவர்கள். உலகில் உள்ள மொழிகளில் வேறெந்த மொழியிலும் இந்த அளவுக்குச் சித்து விளையாடமுடியுமா என்பது சந்தேகமே.

தமிழில் மேல்வாய் இலக்கம் கீழ்வாய் இலக்கம் என்று எண்களின் வரிசையில் வரும். இவை பின்னங்கள் எனப்படும் Fractions சம்பந்தப்பட்டவை. கால், அரை, முக்கால் போன்றவை.

இவற்றை வைத்துப் பாடல்களைப் பாடியிருக்கிறார்கள். பார்க்கும்போது ஏதோ அர்த்தமில்லாமல் பின்னங்களை அங்கேயும் இங்கேயுமாகப் போட்டு எதையோ யாப்பு அமைத்துப் பாடல்களைப் போல் செய்திருக்கிறார்கள் என்று தோன்றும். ஆனால் அவற்றை உடைத்துப்பார்க்கும்போது அவற்றின் உள்ளர்த்தம் புரியும்.

.

முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன்

அக்கா லரைக்கால்கண் டஞ்சாமுன் - விக்கி

இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி

ஒருமாவின் கீழரையின் றோது



இது காளமேகப் புலவரின் பாடல்.

முக்காலுக் கேகாமுன் = முக்காலுக்கு ஏகா முன் = பிறவியில் தோன்றிய

இரண்டு கால்கள் வலுவிழந்து, இடுப்பும் பலமற்று, முதுகும் கூனிப்போய்

இரண்டுகால்களுக்குத் துணையாக மூன்றாவது காலாகக் கோல் ஒன்றை

ஊன்றும்வண்ணம் முதுமை ஏற்படுவதற்குமுன்னர்

முன்னரையில் வீழாமுன் = அதற்கு முன் நரை ஏற்படுமுன்பாக

அக்காலரைக்கால்கண்டஞ்சாமுன்= அந்தக் காலர்களாகிய எமதூதுவரைக்கண்டு அஞ்சி கால்கள் நடுநடுங்குமுன்பாக

விக்கி இருமாமுன் = உயிர் பிரியுமுன்னர் விக்கிக்கொண்டு இருமல் ஏற்படுமுன்னர்

மாகாணிக் கேகாமுன்= சுடுகாட்டுக்கு ஏகாமுன்

கச்சி = காஞ்சிபுரத்தில் உள்ள

ஒரு மாவின் = தல விருட்சமாகிய ஒரு மாமரத்தின்

கீழரை = கீழ் இருக்ககூடியவரை

இன்று ஓது = இன்றைக்கே துதி செய் (காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயில் தலவிருட்சம் மாமரம்)

கொஞ்சி விளையாடும் தமிழ் - 20

ஸ்ரீராமரின் அழகை கம்பன் விமரிசிப்பதைக் காணுங்கள்..ரசியுங்கள்


தோள்கண்டார் தோளே கண்டார் தொடுகழல் கமலம் அன்ன

தாள்கண்டார் தாளே கண்டார் தடக்கை கண்டாரும் அஃதே

வாள்கொண்ட கண்ணார் யாரே வடிவினை முடியக் கண்டார்

ஊழ்கொண்ட சமயத்து அன்னான் உருவுகண் டாரைஒத்தார்.

பொருள்:


தோள்கண்டார் = இராமனின் தோள்களை கண்டவர்கள் 

தோளே கண்டார் = அந்த தோளை மட்டும் தாம் பார்க்க முடியும். அதை விட்டு அவர்கள் கண்களை எடுக்க முடியாது, அவ்வளவு அழகு

தொடுகழல் = கழல் எப்போதும் தொட்டு கொண்டிருக்கும்  

கமலம் அன்ன = தாமரை போன்ற
தாள்கண்டார் = அடிகளை கண்டவர்கள் 

தாளே கண்டார்=அந்த திருவடிகளை மட்டுமே கண்டார்

தடக்கை கண்டாரும் = கையை கண்டவரும் 

அஃதே= அதே போல் கையை மட்டும் கண்டனர்.
வாள்கொண்ட=வாள் போன்ற கூரிய

கண்ணார் = கண்களை உடைய பெண்கள்

யாரே வடிவினை முடியக் கண்டார் = யாருமே அவன் முழு அழகையும் காணவில்லை

ஊழ்கொண்ட = எப்போது தோன்றியது என்று அறியா காலம் தொட்டு உள்ள 

சமயத்து அன்னான் மதங்களில் உள்ள கடவுளின் 

உருவுகண் டாரை ஒத்தார்.   = உருவத்தை கண்டவர்களை போல அந்த பெண்கள் இருந்தார்கள்


எப்படி கடவுளை முழுமையாக கண்டு கொள்ள முடியாது. அது போல இராமனின் அழகையும் முழுமையாக கண்டு உணர முடியாதாம்....

கம்பனிடம் தமிழ்  விளையாட்டை ரசித்தீர்களா?

Friday, January 26, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 19

அருணகிரிநாதரின்  கந்தர் அந்தாதியில் ஒரு பாடல்

உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணாமுலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணாமுலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
உண்ணாமுலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே


இப்படிப் பிரித்து பாருங்கள்

உண் ஆ முலை உமை மைந்து ஆசு அரண் அம்பரர் உயிர்சேர்
உள்நாம் உலையும் ஐ மை தா சர் அண் நம் அருணை வெற்பாள்
உண் ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில்
உண்ணாமுலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே
பதவுரை-

உண் - கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற
ஆ      - பசு இனங்கள் (வாழும்)
முலை - முல்லை நிலத்திற்கு
உ  - தலைவனாகிய திருமாலின்
மை   -  கருமை நிறத்தையும்
மைந்து-வலிமையும்
ஆசு-உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்)
அரண்- கோட்டையாக உள்ள
அம்பர்- கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களின்
உயிர்- உயிரினை
சேர்- மாய்த்து
உள் - தேவர்கள் உள்ளத்தில்  இருந்த
நாம் -அச்சத்தை
உளையும் - போக்கி அழித்த
ஐ - ஐயனே (தெய்வமே)
மை தா - ஆட்டு வாகனத்தில் ஏறும்
சர் - உஷ்ணத்தையுடைய அக்னி தேவன்
அண் - சேர்ந்திருக்கும்
நம் - நாம் அடைக்கலம் புகுவத்ற்கு இடமாகிய
அருணை வெற்பாள் - அண்ணாமலையில் விளங்கி அருளும்
உண்- மிகுதியாகப்
ஆம் - பெருகும்
முலையும் - கற்புடமைக்கும்
ஐ  - அழகிய
மை - அஞ்சனம் தீட்டிய
தா - செவிகளை எட்டிப் பிடிக்கும்
சர - விழிகளின்
நந்தனமும்  - கிருபைக்கும்
ஒப்பில்= ஒப்புவமை இல்லா
உண்ணாமுலை உமை- உண்ணாமுலை என்ற பெயர் கொண்ட பார்வதியின்
மைந்தா - குமாரனே
சரண் சரண் உனக்கே - உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்

பொழிப்புரை-

திருமாலின் நிறம் போல கறுத்தும் உவர்ப்புமுடைய கடலின் கண் அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனதில் இருந்த பயத்தை நீக்கிய தெய்வமே, அக்கினியின் சொருபமாகிய அருணாசலத்தில் விற்றிருக்கும் கருணை கடாச்சரத்திற்கும்,கற்புடமைக்கும் ஒப்புவமை இல்லா பார்வதியின் குமாரனே!நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன் 

கொஞ்சி விளையாடும் தமிழ் -19

பேசுவது எளிது.அதையே உரைநடையாய் எழுதுவது அரிது.அந்த உரைநடையை இசையுடன் கூடிய கவிதையாக ஆக்குவது என்பது அதனெனினும் அரிது.பாமரர்களுக்கும் புரியும் வகையில் பாடல்களை எழுதுபவரே மக்கள் கவிஞர் எனப் போற்றப்படுபவர்கள்.
அப்படிப்பட்ட மக்கள் கவிஞர் ஒருவர் பதினெட்டாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில்..தமிழகத்தில் பிறந்து..வளர்ந்த அருணாசலக் கவிராயர் ஆவார்.இவர் தன் வாழ்நாள் முழுதும் கம்ப ராமாயணம் படித்தும்,பாடியும்,சொற்பொழிவு ஆற்றியும் வந்தவர்.இவரது ராம நாடகத்தில் சூர்ப்பணகையின் காமவெறியை நகைச்சுவைக் கலந்துக் கூறுகிறார்.அதைப் பார்ப்போம்.
கம்ப ராமாயணத்தில் கம்பர் காதலுணர்வின் சிறப்பினைச் சீதையின் வாயிலாகவும்..காமவெறியின் இழிவினை சூர்ப்பணகையின் வாயிலாகவும் புலப்படுத்தியுள்ளார்.அவற்றையே காண்போர் சுவைக்க நாடகமாக்கினார் கவிராயர்.
ராமனின் அழகில் மயங்கி..பேரழகான வடிவொடு ராமர் முன் வருகிறாள் சூர்ப்பணகை.ராமர் மசியவில்லை.சரி..இளையோனையாவது மயக்கலாம் என லட்சுமணனிடம் வருகிறாள்.அவளை அறநெறியில் அகற்ற முடியா லட்சுமணன் மறநெறியைக் கையாண்டு அவளது மூக்கை அறுத்து துரத்துகின்றான்.மூக்கறுப்பட்டும்..காமம் அழியாமல் மீண்டும் ராமனிடம் வருகிறாள் சூர்ப்பணகை.அவனிடம் சொல்கிறாள்...
'உங்கள் தந்திரத்தை நான் தெரிந்துக் கொண்டேன்..கட்டழகுக் கன்னியான என்னை..வேறு எவரும் கைப்பற்றிவிடக் கூடாது என்பதற்காகவும்..மற்றவர் கண்ணேறு என் மீது பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும்..என் பேரழகை சற்றுக் குறைக்க தம்பியிடம் சொல்லி என் மூக்கை அரியச் செய்தீர்கள்.நீங்கள் என்னை விரும்புவது எனக்குத் தெரிகிறது.உங்கள் இளையக் காதலியான நான் மூத்தவளைவிட அழகானவள்.அதனால் சீதைக்குக் கோபம் வரும் என்பதால்..அவளது வாயை அடக்க நீர் செய்த தந்திரம் என் மூக்கை அறுத்தது..மேலும் சீதைக்கு இடை மிகவும் சிறியது.அந்த குறை என்னிடம் இல்லை.அதனால் எனக்கும் ஒரு சிறு குறையை உண்டாக்கி..இருவரையும் சரிநிகர் சமானம் ஆக்கிவிட்டீர்கள்.சீதையைப்போல் இடைக் குறையை எனக்கு உண்டாக்க முடியாது.இடையைக் குறைப்பதை விட மூக்கைக் குறைப்பது எளிது என இக்காரியம் செய்து விட்டீர்.இதன் மூலம் நீங்கள் என் மீது கொண்டுள்ள காதல் புரிகிறது.' என காதற்சுவை சொட்டச் சொட்டக் காமவெறியுடன் சொல்கிறாள் சூர்ப்பணகை.

என் உருவினில் கொஞ்கம் கொய்தீர்
எனக்கென்ன தாழ்ச்சி நீர் செய்தீர்?
அன்னியளாக என்னைப் பிரிய விடாமல்- என்
அழகு கண்டொருவர் கண்ணேறு படாமல்
என்னுருவினில் கொஞ்சம் கொய்தீர்
இடுப்பு சீதைக்குக் கொஞ்சம்
மூக்கிவ ளுக்குக் கொஞ்சம்
என்றெவர்க்கும் சரிக் கட்டவோ - எண்ணி
என்னுருவினில் கொஞ்சம் கொய்தீர்..

கவிராயரின் ராம நாடகம்

என்கிறாள் இன்மொழியுடன் சூர்ப்பணகை.சூர்ப்பணகையின் காமவெறியாகிய காதற்போலியை நகைச்சுவைக் கலந்து நாடகமாக்கினார் கவிராயர்.

Thursday, January 25, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 18

கொஞ்சி  விளையாடும் தமிழ் என நான் எழுதி வருகிறேன்.என் தமிழ் பல கவிஞர்கள் , எழுத்தாளர்கள் படைப்பில் குழந்தையாய், குழந்தை பேசும் மழலையாய் நம் செவிகளுக்கும், மனதிற்கும் இன்பம் அளித்து இனிக்கும் தமிழாய் உள்ளது.

ஆனால், பாவேந்தர் பாரதிதாசனுக்கோ..அவரின் உயிராகவே இருக்கிறது.

அவரின் தமிழின் இனிமை கவிதை ஒன்றைப் பாருங்கள்..

கனியிடை ஏறிய சுளையும் - முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் - காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்,
நனிபசு பொழியும் பாலும் - தென்னை
நல்கிய குளிரிள நீரும்,
இனியன என்பேன் எனினும் - தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்

என் கிறார்

ஆமாம்...எனினும் என்கிறாரே,,,ஏன்? என ஒரு நிமிடம் சிந்தியுங்கள்..
உயிர் இல்லையேல் ஒருவருக்கு சுவைக்க இனிப்பு ஏது?
கனி, கரும்பு, தேன்,பாகு,பால்,இளநீர் என அனைத்தின் சுவையும் உயிர் இருந்தால்தானே அறிய முடியும்.அந்த உயிர் எனக்குத் தமிழ் என்றுள்ளார்.

ஆனால் ஔவையாரோ

பாலும் தெளி தேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன்  -கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா

என வினாயகரை வேண்டுகிறார்.
எப்போதும் ஏதெனும் ஒன்றை தந்துவிட்டு அதைவிட மதிப்புள்ள ஒன்றை பெற விரும்புவது மனித இயல்பு.ஔவை மட்டும் விதி விலக்கா...என்ன?
இனிப்புச் சுவை உள்ளவற்றைக்  கொடுத்து விட்டு அதனெனினும் இனிய இயல்,இசை, நாடகமாகிய முத்தமிழையும் வேண்டுகிறார்.

இராமலிங்க அடிகள்..இதையே..
தனித்தனியாய்  முக்கனிப் பிழிந்து வடித்து ஒன்றாக்கிக் கூட்டி சர்க்கரையும், கற்கண்டின் பொடியையும் பருப்பும் தேனும் கலந்த கலவையைவிட சுவையானவன் இறைவன் என்கிறார்.
இவையெல்லாம் படித்த நாம் வரும் முடிவு..தமிழ்..தெய்வத் தமிழ் என்பதே!

Wednesday, January 24, 2018

கொஞ்சி விளையாடும்தமிழ் - 17



அர்ச்சுனனின் மகன் அபிமன்யூ தனது மனைவியுடன் காதல் பொங்கக் களிப்புறும் பாடல்எத்தனை அர்த்தம் பொதிந்த வரிகள்என் தமிழ் இத்தனை இனியதா என எண்ணிப் பெருமிதம் கொள்ள வைக்கும் கவியரசரின் கற்பனைத் திறன்

வீர அபிமன்யூ படத்தில் தேனாக கவியரசரின் வரிகள் 


பார்த்தேன் சிரித்தேன்
பக்கத்தில் அழைத்தேன்   
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்   
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்   
பார்த்தேன் சிரித்தேன்
பக்கத்தில் அழைத்தேன்   
உனைத் தேன் என நான் நினைத்தேன்   
அந்த மலைத் தேன் இதுவென மலைத்தேன்

கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என   
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்   
கொடித் தேன் இனி எங்கள் குடித் தேன் என   
ஒரு படித் தேன் பார்வையில் குடித்தேன்   
துளித் தேன் சிந்தாமல் களித்தேன்
ஒரு  துளித் தேன் சிந்தாமல் களித்தேன்
கைகளில்  அணைத்தேன் அழகினை ரசித்தேன்

பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வரத் துடித்தேன்  
 உனைத் தேன் என நான் நினைத்தேன்   
அந்த மலைத் தேன் இவரென மலைத்தேன்


மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென   
வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்  
மலர்த் தேன் போல் நானும் மலர்ந்தேன் உனக்கென  
 வளர்ந்தேன் பருவத்தில் மணந்தேன்


எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்   
எடுத்தேன் கொடுத்தேன் சுவைத்தேன்
இனி தேன்  இல்லாதபடி கதை முடித்தேன்

Monday, January 22, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 16

கண்ணதாசனின் இப்பாடலில் தமிழின் விளையாடடிப் பாருங்கள்

சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
வந்தவளை கரம் தந்தவளை
நீ வளைத்துக்கொண்டாய் வளை இட்டு
பொங்குவளை கண்கள் கொண்டவளை
புது பூப்போல் பூப்போல் தொட்டு
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
தூயவளை நெஞ்சை தொடர்ந்தவளை
மெல்ல தொட்டால் தொட்டால் துவளும்
பால் மழலை மொழி படித்தவளை
முகம் பட்டால் பட்டால் படியும்
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
கன்னம் மாதுளை கனிந்த சேயிழை
கரைத்தால் கரையாதோ
இரு கண்ணை சொன்னால் பக்கம்
வந்தால் தந்தால்
நெஞ்சில் அணைத்தால் அடங்காதோ
(வந்தவளை..)
வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்
வானமழைப்போல் ஆனவளை
பூவாய் எங்கே எங்கே மறப்பாள்
நீ அவளை விட்டு போகும்வரை
அது இங்கே இங்கே இருக்கும்
மின்னும் கைவளை மிதக்கும் தென்றலை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணை கெஞ்சும்
வரை சுவைத்தால் சுவைக்காதோ
(வந்தவளை..)

கொஞ்சி விளையாடும் தமிழ் - 15

திருநாவுக்கரசர் தாண்டகம் பாடுவதில் வல்லவராகத் திகழ்ந்தார். எல்லாம் கடவுள் செயலே என்பதை ஒரு திருத்தாண்டகப் பாட்டில் மிக அழகாகப் பாடியுள்ளார் திருநாவுக்கரசர். நீ ஆடச் செய்தால் அதற்குத் தகுந்தபடி ஆடாதவர் யார்? நீ அடங்கச் செய்தால் அடங்காதவர் யார்? நீ ஓடச் செய்தால் ஓடாதவர் யார்? உருகச் செய்தால் உருகாதவர் யார்? நீ காணச் செய்தால் காணாதவர் யார்? நீ காட்டா விட்டால் காணவல்லவர் யார்? என்ற கருத்தினை,
ஆட்டுவித்தால்ஆர் ஒருவர் ஆடா தாரே
அடக்குவித்தால் ஆர் ஒருவர் அடங்கா தாரே
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே
உருகுவித்தால் ஆர் ஒருவர் உருகா தாரே
பாட்டுவித்தால் ஆர் ஒருவர் பாடா தாரே
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே
காண்பார் ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே
(திருநாவுக்கரசர் தேவாரம்)
என்ற தாண்டகப் பாட்டில் எடுத்துரைக்கிறார். அனைவருக்கும் புரியும் வகையில் எளிய சொற்களைக் கையாண்டு பொருள் நிறைந்த இனிய பாடல்களைப் பாடியவர் திருநாவுக்கரசர்.

Friday, January 19, 2018

14- பதினாங்காம் கொஞ்சல்

கொஞ்சி விளையாடும் தமிழ்

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்று வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்


பொருள்:அஞ்சிலே ஒன்று பெற்றான் (ஐம்பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு,ஆகாயம் இவற்றில் காற்று தன்மையாகிய வாயு என்ற பயர் பெற்றவன் பெற்றெடுத்த பிள்ளை)

அஞ்சிலே ஒன்றைத் தாவி (ஐம்பூதங்களில் நீர் தன்மையாகிய சமுத்திரத்தைதாண்டி ஆகாய மார்க்கமாக இந்திய திருநாட்டில் இருந்து இலங்கை நாட்டைஅடைந்தவன்)

அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆர் உயிர் காக்க ஏகி (ராம, இலக்குவன, பரத, சத்ருகுண சகோதரர்கள் நான்கு என இருக்க, இராமரால் கட்டி தழுவப் பட்டகுகன் ஐந்தாம் சகோதரனாகி, அந்த ஐந்து சகோதரர்களுக்கு ஆறாவதாகசேர்ந்தவர் இவர். இவர் தனது உயிருனும் மேலான இராம பிரானின் உயிர்காக்க சீதையை தேடி சென்றவர்)

அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு (ஐம்பூதங்களில் நிலதன்மையாகிய பூமித் தாய் பெற்றெடுத்த பெண் சீதை, அணங்கு: பெண் ; அந்தசீதையை கண்டுபிடித்து வந்தவன்)

கண்டு அயலார் ஊரில் அஞ்சிலே ஒன்று வைத்தான் (அயலார்: மற்றவர்; இவர்தனது ஊர் என்று சொல்ல முடியாதபடி நற்பெருமைகள் எதுவும் இல்லாதநாட்டில் ஐம்பூதங்களில் நெருப்பு தன்மையாகிய அக்கினியை வைத்து அந்தஊரையே தீக்கிரையாக்கியவர்)

அவன் எம்மை அளித்துக் காப்பான் (இத்தகு பெருமைகள் உடையவர். பாடலில் யார் இவர் என்று குறிப்பிடவில்லை என்றாலும், இது அனுமரே! அந்தஅனுமர் பெருமான் நமக்கு வாழ்வில் தேவையானதை அளித்து காத்துஅருள்வார்!)

நோக்கம்: இராமயணத்தில் சிறந்த சேவை செய்தவர்களுள் தலையாயவரானஅனும பெருமாளை போற்றி பாட பட்ட பாடல் ஆகும்

Wednesday, January 17, 2018

பதிமூன்றாம் கொஞ்சல்- 13

உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர்.

உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், 'தெரிவிக்க விரும்பும் பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு 'போல' போன்ற இணைப்புச் சொற்களால் ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர்.

ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்...

பாரதிதாசன் 'குடும்ப விளக்கில்' குழந்தையின் புருவத்தை இப்படிச் சொல்கிறார்..

"எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம்'

எறும்புகளின் வரிசையை அரும்பிவிட்ட புருவத்திற்கு உவமைப்படுத்தியுள்ளார்.

புலவர் நா.காமராசன் முதுமை பற்றி கூறுகையில்.

"தண்ணீரில் இருக்கும் மீனைத்தேடி
தூண்டில் வந்தது போல்..
என்னைத் தேடி
முதுமை வந்தது" என்கிறார்.

அதே போன்று அவர்...

'ரோஜாவையும், மல்லிகையையும்
ஒரே நேரத்தில்
கூந்தலில் வைத்துக் கொள்ளும்
பெண் சிறுமி போல
சூரியனையும் சந்திரனையும்
விடியலின் மெல்லிய வெளிச்சத்தில்
சூடிக் கொண்டிருக்கும் வானம்' என்கிறார்.

ரோஜாவையும்,மல்லிகையையும், சிறுமியையும் முறையே சூரியன், சந்திரன்,வானத்திற்கு ஒப்பிடுகிறார்.

மு.மேத்தா...'சரியாடி பராசக்தி' என்னும் கவிதையில்..

"தண்ணீர்க் குடம்போல்
தனித்துக் காட்சி தரும்
சின்னஞ்சிறிய சிங்களத்தில் தமிழர்களின்
கண்ணீர்க் குடமன்றோ
கவிழ்க்கப்பட்டு விட்டது' என்கிறார்

தண்ணீர்க்குடம் தனியாகக் கிடப்பது போல சிங்களம் தனியாக நாற்புறமும் நீரினில் அமைந்துள்ளது என்றும் தமிழர்கள் கண்ணீரில் வாடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...