Friday, January 26, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 19

அருணகிரிநாதரின்  கந்தர் அந்தாதியில் ஒரு பாடல்

உண்ணா முலையுமை மைந்தா சரணம் பரருயிர்சேர்
உண்ணாமுலையுமை மைந்தா சரண மருணைவெற்பாள்
உண்ணாமுலையுமை மைந்தா சரணந் தனமுமொப்பில்
உண்ணாமுலையுமை மைந்தா சரணஞ் சரணுனக்கே


இப்படிப் பிரித்து பாருங்கள்

உண் ஆ முலை உமை மைந்து ஆசு அரண் அம்பரர் உயிர்சேர்
உள்நாம் உலையும் ஐ மை தா சர் அண் நம் அருணை வெற்பாள்
உண் ஆம் முலையும் ஐ மை தா சர நந்தனமும் ஒப்பில்
உண்ணாமுலை உமை மைந்தா சரணம் சரண் உனக்கே
பதவுரை-

உண் - கன்றுகள் மிகுதியாக உண்ணுகின்ற
ஆ      - பசு இனங்கள் (வாழும்)
முலை - முல்லை நிலத்திற்கு
உ  - தலைவனாகிய திருமாலின்
மை   -  கருமை நிறத்தையும்
மைந்து-வலிமையும்
ஆசு-உவர்ப்பாகிய குற்றத்தையும் (உடையதாய்)
அரண்- கோட்டையாக உள்ள
அம்பர்- கடலில் ஒளிந்திருக்கின்ற அசுரர்களின்
உயிர்- உயிரினை
சேர்- மாய்த்து
உள் - தேவர்கள் உள்ளத்தில்  இருந்த
நாம் -அச்சத்தை
உளையும் - போக்கி அழித்த
ஐ - ஐயனே (தெய்வமே)
மை தா - ஆட்டு வாகனத்தில் ஏறும்
சர் - உஷ்ணத்தையுடைய அக்னி தேவன்
அண் - சேர்ந்திருக்கும்
நம் - நாம் அடைக்கலம் புகுவத்ற்கு இடமாகிய
அருணை வெற்பாள் - அண்ணாமலையில் விளங்கி அருளும்
உண்- மிகுதியாகப்
ஆம் - பெருகும்
முலையும் - கற்புடமைக்கும்
ஐ  - அழகிய
மை - அஞ்சனம் தீட்டிய
தா - செவிகளை எட்டிப் பிடிக்கும்
சர - விழிகளின்
நந்தனமும்  - கிருபைக்கும்
ஒப்பில்= ஒப்புவமை இல்லா
உண்ணாமுலை உமை- உண்ணாமுலை என்ற பெயர் கொண்ட பார்வதியின்
மைந்தா - குமாரனே
சரண் சரண் உனக்கே - உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன்

பொழிப்புரை-

திருமாலின் நிறம் போல கறுத்தும் உவர்ப்புமுடைய கடலின் கண் அசுரர்களை மாய்த்து தேவர்களின் மனதில் இருந்த பயத்தை நீக்கிய தெய்வமே, அக்கினியின் சொருபமாகிய அருணாசலத்தில் விற்றிருக்கும் கருணை கடாச்சரத்திற்கும்,கற்புடமைக்கும் ஒப்புவமை இல்லா பார்வதியின் குமாரனே!நான் உன்னிடம் அடைக்கலம் புகுந்தேன் 

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...