Friday, February 23, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 43

இப்பாடல் சுந்தர கவிராயர் என்பவரின் தனிப்பாடல்


மரம் அது மரத்தில் ஏறி, மரம் அதைத் தோளில் வைத்து,
மரம் அது மரத்தைக் கண்டு, மரத்தினால் மரத்தைக் குத்தி
மரம் அது வழியே சென்று, வளமனைக்கு ஏகும்போது
மரம் அது கண்ட மாதர் மரமுடன் மரம் எடுத்தார்

(இந்தப் பாடல் ஓர் அழகான வார்த்தை விளையாட்டு. இதில் ‘மரம்’ என்ற சொல் வருகிற ஒவ்வோர் இடத்திலும் வெவ்வேறு மரங்களின் பெயர்களைப் பொருத்திப் பொருள் கொள்ளவேண்டும்)
மரம் அது மரத்தில் ஏறி = அரசன் ஒருவன் மாவில் (குதிரையின்மீது) ஏறுகிறான்
மரம் அதைத் தோளில் வைத்து = வேலைத் தோளில் வைக்கிறான்
மரம் அது மரத்தைக் கண்டு = அரசன் ஒரு வேங்கைப் புலியைப் பார்க்கிறான்
மரத்தினால் மரத்தைக் குத்தி = வேலினால் வேங்கையைக் குத்துகிறான்
மரம் அது வழியே சென்று = அரசன் வந்த வழியிலேயே திரும்புகிறான்
வளமனைக்கு ஏகும்போது = வளங்கள் நிறைந்த தன்னுடைய மாளிகைக்குச் செல்கிறான்
மரம் அது கண்ட மாதர் = அரசனைச் சில பெண்கள் காண்கிறார்கள்
மரமுடன் மரம் எடுத்தார் = ஆலத்தி (ஆல் + அத்தி) எடுத்து வரவேற்றார்கள்
ஆக, ராஜா ஒருவன் வேட்டைக்குப் போய் வேங்கையைக் கொன்று திரும்புகிறான், பெண்கள் அவனை வரவேற்கிறார்கள், அவ்வளவுதான் விஷயம், இதைச் சொல்வதற்கு அரச மரம், மா மரம், வேல மரம், வேங்கை மரம், ஆல மரம், அத்தி மரம் என்று ஒரு காட்டையே பாட்டுக்குள் நுழைத்துவிட்டார் புலவர்!

தமிழ் விளையாடும் விளையாட்டை ரசித்தீர்களா?

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...