Thursday, March 1, 2018

கொஞ்சி விளையாடும் தமிழ் - 49

முத்தொள்ளாயிரம்
கைக்கிளை என்பது ஒரு தலைக் காமம் ஆகும். தலைவன் 
- தலைவி என்னும் இருபாலரில் ஒருவர் மட்டும் மற்றொருவரைக் 
காதலிப்பது (கை - சிறுமை அல்லது ஒரு பக்கம் ; கிளை - உறவு) 
பெரும்பாலும் தலைவனிடமே கைக்கிளை நிகழ்வதாகப் பாடல்கள் 
அமைகின்றன.






  • கைக்கிளை பாடல்

  •     இந்நூலின் பெரும்பாலான செய்யுட்கள் கைக்கிளை சார்ந்தன
    என்று பார்த்தோம். அவற்றுள் ஒன்றை இங்கு உதாரணமாகக்
    காணலாம்.

        பாண்டியன் நகர் வலம் வந்தான். அவனை ஒரு கன்னிப்
    பெண் கண்டாள். உடன் அவன்பால் மட்டில்லாக் காதல்
    கொண்டாள். அதன் காரணமாக உடல் முழுதும் பசலை படர்ந்தது.
    தன் உடம்பிலே பசலை படரக் காரணம் தன் கண்கள் அவனைக்
    கண்டமையே என்று எண்ணினாள். அவ்வாறெனில் அதற்குரிய
    தண்டனையை அடைய வேண்டியவை அக்கண்களல்லவா?
    ஆனால் அதற்கு மாறாக, ஒரு பாவமும் அறியாத அவள்
    தோள்களல்லவா தண்டனை பெற்றன! இஃது எவ்வாறு என்றால்
    உழுத்தஞ்செடி வளர்ந்த வயலில் மேய்ந்து அழிவு செய்த செயல்
    ஊர்க்கன்றுகளாக இருக்க, ஒன்றும் அறியாத கழுதையின் காதை
    அறுத்துத் தண்டித்தது போன்றது என்று நினைத்து வருந்தினாள்.
    இப்பொருள் அமைந்த பாட்டு வருமாறு:

    உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்
    கழுதை செவி அரிந்தற்றால் - வழுதியைக்
    கண்ட நம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்
    கொண்டன மன்னோ பசப்பு     (60)
    (செய் = வயல்; பணைத்தோள் = மூங்கில் போன்ற தோள்;
    பசப்பு
     = மேனியில் தோன்றும் நிற வேறுபாடு)

    No comments:

    Post a Comment

    கொஞ்சி விளையாடும் தமிழ்

    பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...