Saturday, August 24, 2019

கொஞ்சி விளையாடும் தமிழ்

உவமைகளுக்கு உவமையில்லை

உவமை அணி என்பது கவிதைக்கு அலங்காரமாக அமைந்து அழகுபடுத்துகிறது என்பார்கள். ஆனால் கவிதையின் உறுப்பாகவே அமையும் உவமைகளே உண்மையில் அழகானவை; பொருத்தமானவை. சங்க இக்கியத்தில் உவமைகள் சிறப்பாக விளங்குவதற்கு இதுவே காரணம். புறநானூற்றில் அழகும் புதுமையும் மிக்க பல நல்ல உவமைகளைக் காணலாம். சில எடுத்துக் காட்டப்படுகின்றன.
* கடைகோல் உள்ளிருக்கும் கடு நெருப்பு
ஒரு நல்ல மன்னன் மிகக் கொடியவனாகவும் இருக்கிறான். பகைவரைக் கொன்று அவர்களின் நாட்டை நெருப்புக்கு இரையாக்கும் இரக்கம் இல்லாத செயல்களைச் செய்கிறான். அவனே தன் குடிமக்களை அருள்மிக்க தந்தையைப்போல் காக்கவும் செய்கிறான். இனிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கிறான். குளிர்ந்த நிழல்போல் பாதுகாக்கிறான். புலவர்க்கும் கலைஞர்க்கும் பொன்னையும் பொருளையும் வாரி வழங்குகிறான். ஒன்றுக்கு ஒன்று முரண்பட்ட இந்த இரு மாறுபட்ட பண்புகளும் ஒரு சிறந்த தலைவனிடம் இருக்கின்றன. 
தலைவனின் இந்த இரட்டைப் பண்பை உணர்த்த ஒளவையார் கூறும் உவமை வியக்கத் தக்கது; புதுமையானது; பொருத்தமானது. அந்தக் காலத்தில் நெருப்பை உண்டாக்குவதற்கு ஒரு கருவி இருந்தது. ஒரு குழிவான மரத்துண்டின் மீது ஓர் உறுதியான மரக்கோலை அழுத்தமாய் நட்டு மிக விரைவாகக் கடைவார்கள். அதிலிருந்து நெருப்புப் பொறி வெளிப்படும். தீக்கடைகோல் என்பது அக்கருவியின் பெயர். சங்க காலத் தமிழர் அதை ஞெலிகோல் என்றனர். ஒளவையார் அதியமானுக்கு அந்தத் தீக்கடை கோலை உவமையாகக் கூறுகிறார். "ஓலை வீட்டின் கூரையில் தீக்கடை கோல் செருகி வைக்கப் பட்டு உள்ளது. முறையாக அதைப் பயன்படுத்தும் போது உணவு சமைக்க, குளிர்காய, விளக்கு ஏற்ற என்று வீட்டாருக்குப் அது பயன்படும். அது கூரையை எரித்து விடுகிறதா? இல்லையே ! ஆனால் அதனை முறையின்றிக் கையாளும் போது, நெருப்பை உமிழ்ந்து மாடமாளிகையைக் கூடச் சுட்டு எரித்துவிடும் இல்லையா? அதியமான் பகைவரை அழிப்பதில் அத்தகைய கடும் சினம்மிக்க வீரனாம்.
இல்இறைச் செரீஇய ஞெலிகோல் போலத்
தோன்றாது இருக்கவும் வல்லன் மற்றுஅதன்
கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன்தான் தோன்றும் காலே

(இல் இறை = வீட்டுக்கூரை, கான்று படு கனை எரி = மூண்டு எரியும் பெருந்தீ)

'அமைதியாய் இருந்தால் இருப்பான், சினம் கொண்டு சீறினால் அழித்து விடுவான்' என்பதை இந்த உவமை எவ்வளவு அழகாய் உணர்த்துகிறது 

No comments:

Post a Comment

கொஞ்சி விளையாடும் தமிழ்

பாவேந்தர் பாரதிதாசனின் கவிதை ஒன்று படி படி காலை படி நூலைப் படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி  காலையில் படி - கடும்பகல்...